நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வாவா நகரை சேர்ந்தவர் வன்னியபெருமாள் (வயது 42). கொத்தனார்வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கலா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் 2–வது மகன் மனோ (வயது 14). இவர் அச்சம்புதூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று விடுமுறை தினம் என்பதால் மனோ வீட்டில் இருந்தான். பள்ளியில் கொடுத்த வீட்டுப்பாடங்களை எழுதுவதற்காக நேற்று மதியம் பேனா வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு மனோ சென்றான்.

பேனா வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது 4 பேர் கொண்ட ஒரு கும்பல் மனோவை நோட்டமிட்டு பின்தொடர்ந்தது. அதில் ஒருவன் சாக்லேட் வாங்கி தருவதாக மனோவிடம் கூறியுள்ளான். மேலும் வலுக்கட்டாயமாக கையை பிடித்து இழுத்துள்ளனர். உடனே அவர்களிடம் தப்பிப்பதற்காக மனோ அங்கிருந்து வீட்டுக்கு ஓட்டம் பிடித்தான்.

உஷாரான அந்த கும்பல் திடீரென்று மனோ மீது மயக்க பொடியை தூவி, கர்சிப்பால் அவனது வாயை பொத்தியது. பின் அம்பாசிடர் காரில் மனோவை ஏற்றிக் கொண்டு அங்கிருந்து தப்பினர். மயக்கமடைந்த நிலையில் கிடந்த மனோவை அந்த கும்பல் சாக்குமுடையில் போட்டு கட்டியது.

2 மணிநேரம் கழித்து மனோ விழித்துக் கொண்டான். அவன் சாக்குமுடை யில் இருந்து திமிறினான். உடனே அந்த கும்பல் சாக்கு முடையை பிரித்து மனோவை வட மொழியில் மிரட்டியதாக தெரிகிறது.

ஆனாலும் அவர்களிடம் தனக்கு சிறுநீர் வருவதாக செய்கையால் மனோ உணர்த்தினான். அப்போது கார் திருப்பரங்குன்றம் ரெயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்தது.

அங்கு காரை நிறுத்திய கும்பல் மனோவை சிறுநீர் கழித்து விட்டு உடனே வருமாறு மிரட்டினர். காரை விட்டு இறங்கிய மனோ சிறிதுதூரம் தள்ளிசென்று காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டான். உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் அங்கு திரண்டு வந்தனர். இதைப்பார்த்த அந்த கும்பல் இங்கிருந்தால் மாட்டிக் கொள்வோம் என்று கருதி அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியது.
மனோவை மீட்ட பொது மக்கள் அவனை திருநகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரிடம் தனக்கு நேர்ந்ததை மாணவன் கூறினான். மேலும் மனோவின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் திருநகர் வந்து மகன் மனோவை இன்று காலை அழைத்து சென்றனர்.

மனோவை எதற்காக கடத்தினார்கள்? வட மாநிலத்தில் அவனை விற்றுவிடும் நோக்கத்தில் கடத்தினார்களா? அல்லது கிட்னி ஏதும் திருடுவதற்கு கடத்தினார்களா? என்பது தெரியவில்லை. திருநகர் போலீசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment