கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளை கைபேசியில் படம் பிடித்ததாக ஆசிரியரைக் கண்டித்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதன்கிழமை தலைமையாசிரியரை முற்றுகையிட்டனர்.
இப் பள்ளி ஆசிரியர் ஒருவர் 8 மற்றும் 9-ம் வகுப்பு பயிலும் மாணவிகளை செல்போனில் படம் பிடித்து வைத்திருப் பதாகவும், அவர்களிடம் தகாத முறையில் பேசி வருவதாகவும் புகார் தெரிவித்து மாணவிகளின் பெற்றோர், தலைமையா சிரியரை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தை நடத்தியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.
இது குறித்து தலைமையாசிரியர் கூறியதாவது: கைபேசியில் மாணவிகளின் படம் எடுக்கப்பட்டதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
இடமாற்ற கோரிக்கை: இப் பள்ளியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 25 ஆண் ஆசிரியர்கள் உள்பட சுமார் 60 பேர் பணியாற்றி வருகின்றனர். முழுவதும் மாணவிகளைக் கொண்ட இப் பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் இரு பிரிவாகச் செயல்பட்டு வருவதாகவும், அதனால் மாணவிகளின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மகளிர் பள்ளிகளில் இனி வரும் காலங்களில் பெண் ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தொடர்ந்து பிரச்னைகளைச் சந்தித்து வரும் கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலுள்ள ஆண் ஆசிரியர்கள் அனைவரையும் பணியிடமாற்றம் செய்து விட்டு பெண் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் வரும் கல்வியாண்டில் மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தப் போவதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment