கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு போட்டி விண்ணப்பம் சமர்பிக்க நீண்ட வரிசையில் காலை முதல் காத்திருந்த பட்டாதாரிகள்.

அரசு பள்ளிகளில் ஆய்வகம் உதவியாளர் பணிக்கு 4 ஆயிரத்து 362 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.இதில் 10-ம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 4 ஆயிரத்து 362 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான எழுத்து தேர்வு வருகிற மே 31-ம் தேதி நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணியிடங்களில் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு:...

கல்வித் தகுதி:

குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 மற்றும் இளங்கலை, முதுகலை படித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 1-7-2014 அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு சலுகை அளிக்கப்படுகிறது. ஊனமுற்றவர் களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இதற்கான எழுத்து தேர்வு 31-5-15-ந் தேதி நடைபெறுகிறது.
கட்டணம்:
தேர்வுக் கட்டணம் ரூ.100 மற்றும் சேவைக் கட்டணம் ரூ.50 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளம் வழியாக மட்டும் விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள், குறிப்பிட்ட அசல் சான்றிதழ் மற்றும் நகல் சான்றுடன் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். அங்கேயே ரொக்கமாக கட்டணம் செலுத்தலாம். புகைப்படம் பிடித்து இணைத்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்க செல்பவர்கள் பத்தாம் வகுப்பு சான்றிதழ், சாதிச்சான்றிதழ், வேலைவாய்ப்பு அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ், உயர்கல்வித் தகுதி சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் எடுத்துச் செல்ல வேண்டும்.

6-5-15-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

தகவல் :-குறிச்சிசுலைமான்


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment