நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிளாங்காடு பகுதியை சேர்ந்தவர் வீரமணி, ஆட்டோ டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் மூக்கையா, விவசாயி.
இன்று காலை மூக்கையா தக்காளிபழங்களை வீரமணியின் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கடையநல்லூருக்கு சென்றார். இடைகால் அருகே உள்ள மங்களாபுரம் பகுதியில் செல்லும் போது அந்த வழியாக சேலத்தில் இருந்து குற்றாலம் நோக்கி ஒரு சுற்றுலா வேன் வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வேனும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் ஆட்டோவின் முன்பகுதி நொறுங்கியது. ஆட்டோ டிரைவர் வீரமணி மற்றும் மூக்கையா ஆகியோர் ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் 2பேரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக கடையநல்லூர் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா வாகனங்கள் மூலம் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே விபத்துகளை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment