கடையநல்லூர் ரஹ்மானியா புரத்தை சேர்ந்தவர் முகைதீன் பிச்சை. இவரது மகன் முகமதுகனி (வயது35). திருமணமாகவில்லை. இவர் கடையநல்லூரில் போஸ்டர் ஒட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.





முகமது கனி தினமும் கடையநல்லூர் பெரிய தெருவில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு படுத்து தூங்குவாராம். வழக்கம் போல நேற்றிரவும் அவர் படுத்து தூங்கினார். அப்போது அங்கு வந்தவர்கள் உருட்டு கட்டையால் முகமது கனியை சரமாரி தாக்கினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
இன்று அதிகாலை அங்கு வந்த பொதுமக்கள் முகமது கனி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் டி.எஸ்.பி. வானுமாமலை, இன்ஸ்பெக்டர் அய்யப்பன், சப்–இன்ஸ்பெக்டர் முத்து லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முகமது கனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில் கொலைக்கான காரணம் குறித்து ‘திடுக்’ தகவல்கள் கிடைத்தது. அதன் விபரம் வருமாறு:–

கொலை செய்யப்பட்ட முகமது கனியும், அந்த பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (23) என்பவரும் சேர்ந்து போஸ்டர் ஒட்டும் வேலை மற்றும் கூலி வேலைக்கு சென்று வருவார்கள். வேலை முடிந்து கிடைக்கும் பணத்தில் 2 பேரும் மது குடித்தும், கஞ்சா அடித்தும் செலவழித்து வந்தனர்.

அதுபோல நேற்று மது போதையில் இருந்த போது நண்பர்களான அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. அப்போது முகமது கனி, சதாம் உசேனை உருட்டு கட்டையால் சரமாரி தாக்கினார். இதில் சதாம் உசேனுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. அவரை அந்த பகுதியில் உள்ளவர்கள் சமரசம் செய்து ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தையல் போடப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. சினிமா படத்தில் ஆஸ்பத்திரியில் படுத்து கிடக்கும் கதாநாயகன் எழுந்து வந்து எதிரிகளை அடிப்பது போல, அடிக்கடி சினிமா பார்க்கும் சதாம் உசேனும் ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று நள்ளிரவு வெளியே வந்து, முகமது கனியை பழிக்கு பழி வாங்க தேடினார்.
அப்போது முகமது கனி வழக்கமாக படுத்து தூங்கும் பெரிய தெரு ஓட்டல் முன்பு படுத்து தூங்கினார்.

அங்கு வந்த சதாம் உசேன், உருட்டு கட்டையால் முகமது கனியை சரமாரி தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். சதாம் உசேன் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு சென்று படுத்து கொண்டார்.

போலீஸ் விசாரணையில் மேற்கண்ட தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான தனிப்படை போலீசார் விரைந்து சென்று சதாம் உசேனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment