அயோத்தியில் ராமர் கோவிலை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்கும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் உச்சநீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து சீரமைப்புப் பணிகளை கண்காணிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உச்சநீதிமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாமல் இருக்கிறது. 1996ஆம் ஆண்டு அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளத்தான் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடும் இடத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்தியிருந்த உச்சநீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு அருகே உள்ள ராமர் கோவிலில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்தப் பதிலின் அடிப்படையில் இன்று அயோத்தி ராமர் கோவிலில் சீரமைப்புப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு ஒன்று கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.



உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment