இன்று... ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றில் நடக்கும் ஷேரிங் எனும் பெரும்பாலான பகிரல்கள்... ஊர் மந்தைகளில் உட்கார்ந்துகொண்டு புரணி பேசிய பழக்கத்தின் டெக்னாலஜி வளர்ச்சி எனும் அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. தனிநபர்களின் தகவல் பரிமாற்றங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய டெக்னாலஜியின் வளர்ச்சி, ஆபத்துக்கும், அசிங்கத்துக்கும் உரிய இடமாகி வருவது வேதனை. திரைத்துறையினர் குறித்த கிசுகிசுக்கள் முதல், சாமான்யர் களின் அந்தரங்கங்கள் வரை வைரல் ஆக்கிக்கொண்டிருக்கிறது இந்த டெக்னாலஜி யுகம்.

ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுவது என்கிற பெயரில் தங்களைப் பற்றிய நிலைத்தகவல்களையும் தேவையற்ற புகைப்படங்களையும் பதிய ஆரம்பித்த இணையவாசிகள், தற்போது வாட்ஸ்அப் என்னும் மாயவலையில் தங்கள் அந்தரங்கங்களைப் பதிய ஆரம்பித்து, பல பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள், பல பிரச்னைகளுக்கும் காரணமாகிறார்கள். ‘ஷேரிங்’ குற்றமாகும் தருணங்கள் பற்றி ஆலோசிக்கும் கட்டுரை இது!

எவை எல்லாம் `வாட்ஸ் அப்'பில் ஷேர் செய்யப்படு கின்றன?

வெறும் வார்த்தைகளை மட்டும் கொண்ட குறுஞ்செய்திகள் மொபைல்களில் பரிமாறப்பட்டு வந்த நிலையில், தற்போது புகைப்படங்கள், வாக்கியங்கள், ஆடியோ, வீடியோ பதிவுகள், போட்டோ கமென்ட்டுகள் என அனைத்தையுமே நொடிகளில், குறைந்த இணையக் கட்டணம் மூலம் ஒருவருக்கொருவரும், குழுக்களிலும் பரிமாற முடிகிறது வாட்ஸ்அப் மூலமாக!

தனிநபர் குறித்த தவறான ஷேரிங்குகள்!

சில மாதங்களுக்கு முன், ‘இந்தப் பெண் கேஸ் ஸ்டவ் சுத்தம் செய்வது போல் வந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்று விடுகிறார்... உஷார்’ என்று ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் `வாட்ஸ்அப்'பில் தகவல் ஒன்று பரவியது. ஆனால், அந்தப் புகைப் படத்தில் இருக்கும் பெண்ணுக்கும் அந்தச் செய்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுடன், மகாராஷ்டிராவைச் சேர்ந்த அந்தப் பெண், தன் புகைப்படம் தன்னை இழிவுபடுத்தும் வகையில் பகிரப்பட்டது குறித்து காவல் நிலையம் சென்றதும் நடந்தது.

சமீபத்தில், காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர், ஒரு பெண் போலீஸிடம் தவறான நோக்கத்தில் பேசும் ஒரு ஆடியோ `வாட்ஸ்அப்'பில் வைரலானது. தொடர்ந்து, அந்த உயரதிகாரி குறித்த விவரம் மீடியாக்களால் அறியப்பட, ‘இவர்தான் அந்தப் பெண் போலீஸ்’ என்று ஆளாளுக்கு தங்களுக்கு வேண்டாத பெண்களின் புகைப்
படங்களை `வாட்ஸ்அப்'பில் உலவவிட்டது, மன வக்கிரத்தின் உச்சம்.

ஆசிரியை, மாணவனைக் காதலித்ததாகச் சொல்லி வெளியிடப்பட்ட செல்ஃபிகள், அடுத்த அதிர்ச்சி. சமீப வைரல் அது. கல்லூரி மாணவி ஒருவர், ஒரு மாணவனைக் காதலித்து, பின் அந்தக் காதலில் இருந்து விலகி மற்றொரு மாணவனைக் காதலித்திருக்கிறார். முன்னாள் காதலன், தானும் அந்தப் பெண்ணும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், பேசிய ஆடியோ பதிவுகள் உள்ளிட்ட அந்தரங்கங் களை இரண்டாவது காதலனுக்கும், அவர் அம்மாவுக்கும் தெரியப்படுத்தியதுடன், தன் நண்பர்களுக்கும் வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்துவிட்டான். தற்போது இந்த ஆடியோ பதிவு, பல லட்சம் மக்களுக்கும் `செயின் லிங்க்'காக பரப்பப்பட்டிருக்கிறது.

இரண்டு, மூன்று நபர்களுக்கு இடையேயான பிரச்னையை, பல லட்சம் மக்களுக்கும் பொழுதுபோக்காக்கியுள்ளது டெக்னாலஜி. ஆடியோவைப் பகிர்ந்த மாணவன் முதல் குற்றவாளி என்றால், ஒரு பெண்ணின் மானத்தை, வக்கிர எண்ணத்துடன் தன் தொடர்புகளுக்குப் பகிர்ந்த அனைவருமே இதில் குற்றவாளிகள்தான். இந்தப் பதிவென்று இல்லை... மற்றவர்களின் அந்தரங்கத்தைச் சுமந்து வரும் ஒவ்வொரு ஆடியோ, வீடியோக்களையும் அவசர அவசரமாக மற்றவர்களுக்குப் ‘ஷேர்’ செய்யும் அனைவருமே தங்களின் இந்த இழிவான செயலின் மூலம், குறைந்தபட்ச நாகரிகமோ, மனிதாபிமானமோ இல்லாத வர்களாகிறார்கள்.

வாட்ஸ்அப் குற்றங்களுக்கு தண்டனை என்ன?

காவல்துறை, மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையாளர் ஜெயக்குமார் கூறும்போது, ‘‘சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், டிவிட்டரில் எல்லாம் சைபர் குற்றங்கள் நடக்கும்போது, அதை பதிவு செய்தவர்களை சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம். `வாட்ஸ்அப்' பொறுத்தவரை முதல் குற்றவாளியை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், டெக்னாலஜி உலகில் அனைத்தும் சாத்தியமே. மெள்ள நூல்பிடித்து அவர்களையும் சிறைப்பிடித்து விடுவோம். சைபர் கிரைம் குற்றவாளிகளுக்கு, குறைந்தது ஓர் ஆண்டு முதல், குற்றத்தின் அளவைப் பொறுத்து ஆயுள் தண்டனை வரை கிடைக்கலாம்’’ என்ற ஜெயக்குமார்,

‘‘பொதுவாக, ஒரு பெண்ணைக் காணவில்லை என்றோ, அவரைப் பற்றி அவதூறாகவோ, அந்தரங்க தகவலோ `ஃபார்வேர்டு மெசேஜ்' ஆக உங்களை வந்தடைந்தால், அதை மற்றவர்களுக்குப் பகிராதீர்கள். பகிர்தலும் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததற்கு சமமே எனும் வகையில் பகிர்பவர்களும் தண்டனைக்குரிய குற்றவாளிகளாக வாய்ப்புகள் அதிகம்'' என்று எச்சரிக்கை செய்தவர்,

``இப்படி எலெக்ட்ரானிக் மீடியா குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள் பலர் என்றாலும், சிலர்தான் தைரியமாகப் புகார் கொடுக்க வருகிறார்கள். அப்படியே புகார் கொடுக்கிறவர்களும் எஃப்.ஐ.ஆர் போட வேண்டாம் என்றும், குற்றவாளியைக் கண்டுபிடித்த பின் கண்டித்தும் விட்டுவிடு கிறார்கள். காவல்துறை சைபர் குற்றங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பான வகையில் உதவுவதால், பயமின்றி புகார் கொடுங்கள்’’ என்றார் அக்கறையுடன்.

வாட்ஸ்அப்... நவீன கழிப்பறை சுவர்!

மக்களின் இந்த ஷேரிங் மனநிலை பற்றிப் பேசிய பெண்ணியவாதி ஓவியா, ‘‘இன்றைக்கு தொழில்நுட்பம் வளர்ந்த அளவுக்கு, பண்பாடு வளரவில்லை. பொதுவெளியில் தனி மனிதனை அவமானப் படுத்துவது சட்டவிரோதமானது. முன்பெல்லாம் ஒரு பெண்ணை அசிங்கப்படுத்த, கழிவறையில் அவளைப் பற்றி அசிங்கமாக எழுதுவார்கள். அதன் பரிணாம வளர்ச்சிதான், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் சுவர்கள் எல்லாம் என்றாகிவிட்டது. இடங்கள்தான் மாறுபட்டிருக்கிறதே தவிர, வக்கிர எண்ணங்கள் ஒருபோதும் மாறவே இல்லை. தனிமனித ஒழுக்கம் இல்லாதவரை, எந்தச் சமூகக் குற்றத்தையும் தடுக்க முடியாது’’ என்றார் கோபமாக.

சமயங்களில் ‘ஷேரிங்’ கெட்டதுதான்!

ஸ்மார்ட் போன் எச்சரிக்கை!

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வே.பாலு, ‘‘அந்தரங்க விஷயங்களைப் புகைப் படங்களாகவோ, ஆடியோவாகவோ, வீடியோவாகவோ எக்காரணத்தைக் கொண்டும் ஸ்மார்ட் போனில் பதியாதீர்கள். உங்கள் அலைபேசியை மற்றவர்கள் பார்க்காதவாறு கண்டிப்பாக செக்யூரிட்டி ஆப்ஷன் பயன்படுத்துங்கள். கணவராக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் அலைபேசி செக்யூரிட்டி கோடு, இ-மெயில், ஃபேஸ்புக் பாஸ்வேர்டுகளை பகிராதீர்கள். ஏனெனில், உங்கள் ஸ்மார்ட் போனில் நீங்கள் வைத்திருக்கும் உங்கள் தோழியின் பெர்சனல் புகைப்படம் ஒன்றை தங்கள் நட்பு வட்டங்களுக்கு ஷேர் செய்யத் துறுதுறுக்கலாம் உங்கள் கணவர் / நண்பரின் விரல்கள்... நீங்கள் அறியாமலேயே. எனவே, தெரிந்தோ, தெரியாமலோ அந்த தவறைச் செய்யாதீர்கள்’’ என்று எச்சரிக்கிறார்.

உண்மையும் பொய் ஆகும் சூழல்!

விபத்தில் சிக்கிய ஒருவருக்கு பி பாசிட்டிவ் ரத்தம் தேவைப்படுகிறது. அதுகுறித்து அவர் நண்பரோ, உறவினரோ தன் வாட்ஸ்அப் தொடர்புகளுக்கும், குழுக்களுக்கும் உதவி கோரி செய்தி அனுப்புகிறார். அது பலராலும் ஃபார்வேர்டு செய்யப்பட, சீக்கிரமே ரத்தம் கிடைக்கிறது. இது நல்ல விஷயம்தானே என்கிறவர்கள், தொடர்ந்து படியுங்கள். இந்தச் செய்தியால் ரத்தம் கிடைக்கப்பெற்றவர் குணமாகி வீடு திரும்பிய பின்னும், வீடு திரும்பி வருடங்கள் ஆன பின்னும் கூட, இந்தச் செய்தி மட்டும் தொடர்ந்து `வாட்ஸ்அப்'பில் ஃபார்வேர்டு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கும். காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு, கல்வி உதவித் தொகை கோரும் மெசேஜ்கள், சேமிப்புத் திட்டங்கள் குறித்த அறிவிப்பு என இப்படி வருடக் கணக்கில் உலவிக்கொண்டிருக்கும் வாட்ஸ்அப் தகவல்கள் பல, உண்மையாகவே இருந்தாலும் காலம் கடந்ததால் பொய்யாகிவிடுகின்றன. ஆனால், ஒவ்வொரு தடவையும் புதிதாக இதைப் பார்க்கும் நபர்கள், சம்பந்தப் பட்டவர்களைத் தொடர்புகொள்ளும்போது ஏற்படும் சங்கடங்கள் சொல்லி மாளாது. இதுபோன்ற உதவி கேட்கும் செய்திகளில் தேதி, வருடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டிருந்தாலாவது ஃபார்வேர்டு செய்பவர்கள் தவிர்க்க முடியும். ஆனால், யாருமே அதைச் செய்வதில்லை.

இதுவாவது பரவாயில்லை. துளியும் உண்மை இல்லாத செய்திகளும் இரக்கமே இல்லாத அரக்க குணம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்டு, உலவவிடப்படுவது கொடுமை. ரத்தப்புற்றுநோய்க்கு இலவச மருந்து, பெங்களூர் ஹெச்.சி.எல் நிறுவனத்தில் கல்வி உதவித் தொகை என்று உலா வந்து கொண்டிருக்கும் பொய்யான தகவல்களே இதற்கு சாட்சி. இதுபோன்ற செய்திகளைப் பார்த்துவிட்டு தொடர்பு கொள்பவர்கள் மற்றும் தொடர்பு கொள்ளப்படுபவர்கள் என இரண்டு தரப்புக்குமே மன உளைச்சல்தான் பரிசாகக் கிடைக்கிறது!

- பொன்.விமலா #வாட்ஸ்அப் #அவள்விகடன்#அவேர்னஸ்


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment