கடையநல்லூர் சமூக சேவை அறக்கட்டளை அல்லாஹ்வின் பேரருளால் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக தற்போது கடையநல்லூரில் நடைபெறும் திருமணங்களில் பெரும்பாலும் திருமணத்திற்கும் விருந்திற்கும் ஒரே அழைப்பு விடுப்பது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒரு நல்ல முயற்சி என்று எல்லோரும் மனமாறப் பாராட்டுகின்றனர். 

திருமண வைபவங்களில் கலந்து கொள்ளவருவோர் அனைவரும் இந்த நற்செயலுக்காக கடையநல்லூர் சமூக சேவை அறக்கட்டளையைப் பாராட்டுகின்றனர். இதைத் தொடர்ந்து பெண்களுக்கு மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் நிச்சயமாக “வாளிச்சோறு” கலாச்சாரத்தையும் நிறுத்தி விடலாம் . விருந்துக்கு ஆகும் செலவை விட வீட்டுக்கு எடுத்துச் செல்லும் “வாளிச் சோறுக்கு” இரு மடங்கு செலவாகிறது. இதில் ஆவலாதிகள் , மனஸ்தாபங்கள் உண்டாகவும் வழி பிறக்கிறது. காலையில் புரோட்டா சால்னா , பதினோருமணிக்கு வாளிச்சோறு என்று பெண்கள் பிசியாகிவிடுகிறார்கள். இதில் ஏற்படும் செலவை தனியாக கணக்கிட்டுப் பார்த்தால் தலை சுற்றி கீழே விழுந்து விடுவார்கள். 

இதுமட்டுமல்ல பெண் வீட்டில் பூச்சரம் கொடுக்கும் ஒரு மட்டமான வழக்கமும் முற்றிலுமாக ஒழிக்கப் படவேண்டும். பூவை வாங்கி தலையில் வைக்கும் பெண்கள் அதை தரையில் தவறவிட்டு மற்றவர்களின் கால்களில் மிதிபடச் செய்கிறார்கள். ஒரு திருமண வீட்டின் முன்பு ஏராளமான பூச்சரங்கள் காலில் மிதிபட்டுக் கிடப்பதை சாதாரணமாகக் காணமுடியும். இந்தப் பூச்சரத்திற்குப் பல ஆயிரம் வீணாகச் செலவழிக்கப்படுகிறது. இதை எல்லாம் நிறுத்துவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். 


கருமாயப்பட்டு வெளிநாட்டு வெயிலில் வெந்து மடிந்து செந்நீர் சிந்தி சேகரிக்கும் பணமெல்லாம் இப்படியா சீரழிய வேண்டும் என்பதை வெளிநாடுவாழ் கடையநல்லூர்வாசிகள் தயவுசெய்து சிந்திக்க வேண்டும். அவரவர் குடும்பங்களுக்கு அறிவுறுத்தவேண்டும். மனைவி மக்களுக்கு தங்களின் சிரமங்களை மனம்விட்டுச் சொல்ல வேண்டும். இதன் மூலம் அனாவசியச் செலவுகளைக் குறைத்து திருமணங்களை எளிதாக்க வேண்டும். 


இதையெல்லாம் சொல்லுவதற்கு ஒரு இயக்கம் தேவையில்லை. ஒவ்வொரு வெளிநாடு வாழ் கடையநல்லூர்வாசியும் மனம் வைத்தால் இந்தச் சீர்திருத்தங்களை செயலாற்றிக் காட்ட முடியும். என் சம்பாத்தியம் நான் செலவழிக்கிறேன் என்று யாராவது சொன்னால் அவர்களைத் திருத்தவே முடியாது. வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. அல்லாஹ் நேசிக்காதவர்களை சோதனைகள் மூலம் நிர்மூலமாக்கிவிடுவான்.


Mustafa Kamal

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment