தமிழகம் முழுவதும் அரசு மதுபானக் கடைகளையொட்டி மது அருந்த வசதியாய் “பார்” அமைக்கப்பட்டிருந்தன. இந்த பார்கள் தற்போது அதிக விலைக்கு ஏலம் போனதால் தனியார் யாரும் பார் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. இதன் காரணமாக மதுபானக் கடையில் மது வாங்குபவர்கள் சாலைகளில் நின்று கொண்டும், வாகனங்களில் இருந்து கொண்டும் மது அருந்தி வருவது வழக்கமாகிவிட்டது.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகரம் கிருஷ்ணாபுரம் புதுக்குளம் பகுதியையொட்டி அமைந்துள்ள அரசு மதுபானக் கடையில் “பார்” வசதிக்கூடம் இல்லாததால் மதுபிரியர்கள் மதுப்பாட்டில்களை வாங்கிக் கொண்டு புதுக்குளத்திற்குள் சென்று அருந்துகின்றனர்.

அப்படி மது அருந்தும் குடிமகன்கள் ஒரு கட்டத்தில் குளத்திற்குள் நடந்து செல்ல முடியாத வண்ணம் பாட்டில்களை எறிந்து உடைப்பதும், அப்பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு செய்யும் பொருட்டு தள்ளாடுவதும் வாடிக்கையாகிவிட்டது.

எனவே அதனை தடுக்க அதிகாரிகள் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment