காலையில் தெருவில் பாவு ஆத்தி, அதில் இருந்து கிடைக்கும் கம்புப் பணத்தில் டிஃபன் சாப்பிட்டவர்கள் நாங்கள்..
வயலுக்குச் சென்று, உழவனுடன் சேர்ந்தமர்ந்து, பச்சை மிளகாயை உப்பில் முக்கி, பழைய சோறு சாப்பிட்டவர்கள் நாங்கள்..
அறுத்த நெல்லை வீட்டில் அவித்துக் காயவைத்து, மில்லில் அரைத்து அரிசியாக்கி, அவலும் பயறும் தின்றவர்கள் நாங்கள்..
காலை மதியம் மாலை என மூன்று வேளையும் தார் சுற்றி (நூல் நூற்று) தறி நெய்து பசியாறியவர்கள் நாங்கள்..
வீட்டில் தினமும் தரும் 1 பைசா, 2 பைசா, 3 பைசாவை வாங்கிக் கொண்டு, பள்ளி சென்று, அமெரிக்கக் கோதுமையை சத்துணவாகச் சாப்பிட்டவர்கள் நாங்கள்..
பள்ளிக்கு வராதவர்களை, காலிலே விலங்கிட்டு, கைதி போல் இழுத்து வந்து, கல்வி கற்றுக் கொடுத்தவர்கள் நாங்கள்..
கோழி வளர்த்து, அதற்கு நோய் வந்தால் வைத்தியம் பார்க்க, கால்நடை மருத்துவமனைக்குக் கூடையில் கொண்டு சென்றவர்கள் நாங்கள்..
இரவில் கோழியைக் கூட்டில் அடைத்துக் காலையில் திறக்கும் போது, பூனை(எருவு)யால் கடிபட்டு தன் உயிரை விட்டிருக்கும் கோழியைக் கண்டு, கண்ணீர் விட்டவர்கள் நாங்கள்..
கோழி முட்டையை அடைகாக்க வைத்து, அதில் இருந்து வரும் குஞ்சுகளைக் கண்டு, அளவில்லா ஆனந்தம் அடைந்தவர்கள் நாங்கள்..
ரேடியோவுக்கு வரி கட்டி, இலங்கை ரூபவாஹினியில் படம் பார்த்து, வெள்ளிக்கிழமை தோறும் ஒலியும் ஒளியும் பார்த்தவர்கள் நாங்கள்..
தெப்பத்திலும், ஊருணியிலும், அட்டக்குளத்திலும், தாமரைக் குளத்திலும் குளித்தவர்கள் நாங்கள்..
பம்பு செட் ரூமுக்கு மேலேறி, டைவ் அடித்து, கிணற்றிலே குளி(குதி)த்தவர்கள் நாங்கள்..
அவ்வாப் பந்து, செல்லாங்குச்சி, பம்பரம், நொண்டி, கண்ணாமூச்சி, ஆவியம் மணியாவியம், உப்பு, கல்லா தரையா, ரோதை, புளியங்கொட்டை, தெல்கா, தட்டாங்கல், தையம், கோலி, கிச்சுக் கிச்சுத் தாம்பூலம், யார் வாசல் கருப்பட்டி வாசல், பூப்பறிக்க வாறீர்கள், மல்லிகைப் பூவே மல்லிகைப்பூவே மெல்ல வந்து பிச்சிப் போ, போன்ற விளையாட்டுக்களை ஆடியவர்கள் நாங்கள்..
பெருநாள் கந்தூரி வந்தால், நெசவுக்கு லீவு விட்டு, வீடு மெழுகி, பத்தி பொருத்தி, பாசத்துடன் ஒற்றுமையாய் பெருநாளைக் கொண்டாடியவர்கள் நாங்கள்..
இதையெல்லாம் எங்கள் சந்ததிக்குச் சொல்லிக் கொடுக்காமல் வளர்த்து, இன்று மகிழ்ச்சியையும், நிம்மதியையும் இழந்து நிற்பதும் நாங்களே..
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment