ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை இணைத்து இஸ்லாமிய தேசத்தை உருவாக்கும் நோக்கில் அங்குள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றது. இதனை எதிர்த்துப் போரிட இயலாத ஈராக் அரசு உலக நாடுகளின் துணையை எதிர்பார்க்கின்றது. 

ஈராக்கின் வடக்குப் பகுதியில் இஸ்லாமிய ஜிஹாதிப் போராளிகளின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். 

கடந்த வாரம் காரகோஷ் நகரை ஜிஹாதிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் கிறிஸ்துவர்களும், சிறுபான்மை யசிடி சமூகத்தினரும் ஆவர். 

இந்த நிலை குறித்து வாடிகன் நகரத்தில் உள்ள போப்பாண்டவர் அலுவலகத்திலிருந்து நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினரின் மிருகத்தனமான நடவடிக்கைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. 

பெண்களைக் கடத்துதல், சிறைப் பிடித்தவர்களை கொடூரமான முறையில் நடத்துதல், பிறப்புறுப்புகளை அழித்தல், இறந்தவர்களின் சடலங்களை பொது இடங்களில் வீசுதல், சிலுவையில் அறைதல் என்று காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர் என்று இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதனை வன்மையாகக் கண்டிக்கும் வாடிகன் நிர்வாகம் இதற்கு எதிரான கண்டனத்தைத் தெரிவிக்குமாறு இஸ்லாமியத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இந்த இயக்கத்திற்கு எதிரான தெளிவான, தைரியமான நிலைப்பாட்டினை மேற்கொள்ளுமாறும் அந்தத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

மதத்தின்பேரில் இந்த காட்டுமிராண்டித்தனத்தை நியாயப்படுத்த முடியாது என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.  இந்த வார இறுதியில் ஐக்கிய நாடுகளுக்கான தேவாலயத் தூதர் சில்வானோ டோமசி ஈராக்கின் போராளிகள் மீதான அமெரிக்க விமானத் தாக்குதலுக்கு ஆதரவளித்துப் பேசியுள்ளார். காலதாமதம் ஏற்படுவதற்குமுன் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை என்று அவர் இந்த செயலைப் பற்றி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment