கடையநல்லூர் புதிய தாலுகா அறிவிப்பை தொடர்ந்து தாலுகா அலுவலகத்திற்கான இடம் தேர்வு பணிகள் தீவிரமடைந்துள்ளன. இது தொடர்பாக கலெக்டர், டிஆர்ஓ ஆய்வு மேற்கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், ஆலங்குளம், நாங்குநேரி, ராதாபுரம், தென்காசி, வீ.கே.புதூர், செங்கோட்டை, சிவகிரி, சங்கரன்கோவில் ஆகிய 11 தாலுகாக்கள் உள்ளன.
இதில் தென்காசி, சிவகிரி, செங்கோட்டை, சங்கரன்கோவில் ஆகிய நான்கு தாலுகாக்களை பிரித்து புதிதாக கடையநல்லூர் தாலுகாவும், சங்கரன்கோவில் தாலுகாவை பிரித்து திருவேங்கடம் தாலுகாவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நெல்லை மாவட்டத்தில் தாலுகாக்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்தது.
புதிதாக அமைய உள்ள கடையநல்லூர் தாலுகா 52 ஆயிரத்து 71 ஹெக்டேர் பரப்பளவை கொண்டது. 3 லட்சத்து 14 ஆயிரத்து 690 பேர் உள்ளனர். புதிய தாலுகாவில் கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 3 சட்டசபை தொகுதிகள் இடம்பெறுகிறது. கடையநல்லூர், புளியங்குடி ஆகிய இரண்டு நகராட்சிகளும், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், சங்கரன்கோவில், செங்கோட்டை ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியங்களையும் உள்ளடங்கியது.
இவை தவிர ஆய்க்குடி, சாம்பவர்வடகரை, அச்சன்புதூர் ஆகிய மூன்று டவுன் பஞ்சாயத்துகளும் இடம்பெறுகின்றன. மேலும் 6 பிர்காக்களும், 31 வருவாய் கிராமங்களும், 25 கிராம பஞ்சாயத்துகளும் இடம் பெறுகின்றன.
புதிய தாலுகாக்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடையநல்லூர் தாலுகா அலுவலகத்திற்கு தேவையான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக, கலெக்டர் கருணாகரன் கடையநல்லூரில் நேற்று ஆய்வு நடத்தினார். புதிய தாலுகா அலுவலக கட்டிடம் அமைப்பதற்கு 5 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதற்காக அப்பகுதியில் உள்ள கோயில் புறம்போக்கு நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது குறித்து, வருவாய் துறை வட்டாரங்கள் கூறுகையில், ''அரசின் அறிவிப்பை தொடர்ந்து கடையநல்லூர் புதிய தாலுகாக்களுக்கான இடம் தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. புதிய தாலுகா அலுவலகத்திற்கான ஊழியர்கள் பணியிடங்களுக்கு தமிழக அரசு தான் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
புதிய தாலுகா அலுவலக கட்டுமானப் பணிக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யும். புதிய தாலுகாக்கள் எப்போது செயல்படும் என்பது அரசு ஆணை வந்தவுடன் தெரியவரும்'' என்றனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment