இந்திய மக்களை உலகம் முழுவதும் இந்துக்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். எனவே இந்தியாவை இந்து நாடு என்று தான் கூறவேண்டும் என்று மோகன் பகவத் கூறியிருந்தார்.

அவரது கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அரசியல் சட்டம் இந்தியாவை பாரதம் என்று தான் கூறுகிறதே தவிர இந்துஸ்தான் என்று ஒருபோதும் கூறவில்லை என்று பல்வேறு அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. அரசியலமைப்பு சட்டத்தில், இந்தியா பல்வேறு மாநிலங்கள் சேர்ந்த ஒரு நாடு என்று கூறப்பட்டுள்ளதை பகவத் நன்றாக படிக்க வேண்டும் என்று கூறியுள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி, இந்தியாவை பாரதம் என்று தான் சட்டம் கூறுகிறதே தவிர ஹிந்துஸ்தான் என்று கூறவில்லை என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சீதாராம் யெச்சூரியும் இதே கருத்தை கூறியுள்ளார். பகவத் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கிறாரா இல்லையா என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என்று யெச்சூரி கேட்டுக்கொண்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறுகையில், அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், நாட்டில் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் வசிப்பதால் தான் இந்தியாவை இந்துஸ்தான் என்று கூறாமல் பாரதம் என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார். பகவத்திற்கு அரசியலமைப்பு சட்டம் பற்றிய ஞானம் இல்லை, எனவே அவர் அது பற்றி தெரிந்து கொண்டு பின்னர் கருத்து கூறவேண்டும் என்று மாயாவதி கேட்டுக்கொண்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment