இந்நிகழ்வை தினமலர் நாளேடு பயங்கரவாத பயிற்சிக்கு சிறுவர்கள் கடத்தப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னையிலிருந்து வெள்ளிக் கிழமை இரவு கோழிக்கோடு நோக்கிப் புறப்பட்ட மங்களூர் மெயில் ரயிலில் 50-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக கடத்தப்படுவதாக சென்னை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்த நேரத்தில் மங்களூர் மெயில் ரயில், காட்பாடி அருகே சென்றுகொண்டிருந்தது. இரவு 10.40 மணியளவில் காட்பாடிக்கு வந்த அந்த ரயிலில் சோதனை நடத்தியபோது, 35 சிறுவர்கள் ஒரு பெட்டியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை ரயிலில் இருந்து கீழே இறக்கிய போலீஸார், அங்குள்ள தனி அறைக்கு அழைத்துச் சென்று, விசாரணை நடத்தினர். அப்போது, அதே ரயிலில் மேலும் 13 பேர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் 13 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரையும் காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள ஒரு அறைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், 48 மாணவர்களும் பீகார், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மதரஸாவில் படித்துவருவதும் தெரியவந்தது.
மாணவர்கள் அனைவரும் ரம்ஜான் விடுமுறைக்காக தங்கள் ஊருக்குச் சென்றதும், மீண்டும் மதரஸாவுக்கு செல்லும்போது, போலீஸாரிடம் பிடிபட்டதும் தெரியவந்தது. இதனால், சனிக்கிழமை மாலை கோழிக்கோடு நோக்கிச் சென்ற மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அனைவரும் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டனர்.
மதரஸாவுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களை பிடித்து வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளைச் சேர்ந்த தமுமுகவினர் காட்பாடி ரயில் நிலையத்தில் திரண்டனர். ரயில்வே போலீஸாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீஸார் சமாதானம் செய்தனர். மாணவர்களை போலீஸ் பாதுகாப்புடன் கோழிக்கோடு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக உறுதி அளித்தனர். அதன்பிறகே தமுமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஆனால் இந்த நிகழ்வை பிரபல தினமலர் நாளேடு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், பல பயிற்சிகளை கொடுப்பதற்காக 49 சிறுவர்களையும் கோழிக்கோடுக்கு அழைத்துச் செல்வதாகவும், அங்கு 12 ஆண்டுகள் இவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்று செய்தியை வெளியிட்டுள்ளது.
போலீசார் தெரிவித்த தகவலுக்கு மாற்றமாக தினமலர் நாளேடு கல்வி கற்கச் செல்லும் மாணவர்களை, தீவிரவாதிகள் போல் புனைந்து செய்தி வெளியிட்டிருப்பதற்கு கண்டனக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment