ஆயிரங்கண் போதாது வண்ணக் கிளியே குற்றால அழகை நான் காண்பதற்கு வண்ணக்கிளியே" என்பது வெறும் திரைப்படப்பாடல் மட்டுமன்று. திருக்குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடராசப்ப கவிராயர் இந்த மலையின் வளத்தை வியந்து பாடியுள்ளார். "வானரங்கள் கனி கொடுத்து..." என்னும் வரிகளோடு தொடங்கும் அந்தப் பாடல் நீர்நிலைகள், பாறையிடுக்குகளில் பொதிந்திருக்கும் தேன்கூடுகள், புள்ளினங்கள், தாவரங்கள், விலங்குகள் என மலையில் காணும் இயற்கையின் பல்லுயிர்களையும், காலந்தோறும் தொடரும் இதமான சாரலையும் அதன் எழிலையும் பாடி... திருகூடமலை எங்கள் மலையே" என்று அவர் பெருமிதம் கொள்கிறார். அவர் இயற்றிய திருக்குற்றாலக் குறவஞ்சி நாட்டிய நாடகம் இன்றைக்கும் அரங்கேறுகிறது.
மஞ்சள் கடம்பு, கரையான் அரிக்காத விடத்தேரை போன்ற மர வகைகளும், புலி, வரையாடு, சருகுமான் போன்ற உயிரினங்களும், அகத்திய மலை, ஐந்தலைப் பொதிகை மலைவளமும் தாமிரபரணி, நம்பியாறு, பச்சையாறு, பாம்பாற்று நீர்வளமும் ஆரல்வாய்மொழிக் கணவாயும், செம்மணல் பாலை நிலத் தேரிக்காடுகளும், நெல்லை மாவட்டத்துக்கு இயற்கை அளித்த அடையாளங்கள்.
தொலைந்த அழகு
பேரருவி, பாலருவி, ஐந்தருவி, தேனருவி, சிற்றருவி, புலியருவி, செண்பகாதேவி, அகத்தியர், குப்பாவுருட்டி என அருவிகளின் அணிவகுப்பைக் காண ஆயிரங்கண் தேவைப்பட்டதெல்லாம் அந்தக் காலம்! கண்களால் பார்க்கச் சகிக்காத அளவுக்குக் குற்றாலத்தின் அழகு இன்றைக்குக் குலைக்கப்பட்டு விட்டது.
இரவில் பெரும் வெளிச்சத்தைக் கக்கும் விளக்குகள் பொருத்தப்பட்டு இருபத்தி நான்கு மணி நேரமும் மக்கள் குளிக்கும் ஒரே இடம் குற்றாலமாகத் தான் இருக்கும். தென்மேற்குப் பருவமழைதோறும் இங்கு விழும் சாரலின் கதகதப்பு மாநிலம் கடந்தும் மக்களை ஈர்க்கிறது. தினசரி பல்லாயிரக்கணக்கில் திரளும் மக்கள் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் போன்ற எண்ணற்ற ரசாயனக் கலவையை அருவி நீரில் கரைக்கிறார்கள்.
இதனால் நீரின் இயல்புத்தன்மை சீர்கெடுகிறது. கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்குச் சுவை மிகுந்த குடிநீராய் இருந்த இந்தப் பழம்பெரும் அருவி, இப்போது சாக்கடையாய்த்தான் பாய்கிறது. பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகக் கலங்குகிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.
ரசாயனக்கழிவு
ஆற்று நீரின் மேல்மட்டத்தில் வேதியியல் கரைசல் படிந்து ஆற்றின் ஆழத்தில் வாழும் மீன்கள், தவளைகள் போன்ற நீர்வாழ் உயிர்கள் வாழ்வதற்கான உயிர்மூச்சைத் தடை செய்கிறது. நீரின் தன்மையும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இப்படி சோப்பு நுரையில், எண்ணெய் பிசுபிசுப்பில் ஆற்று நீர் அழுக்கடைந்தது குறித்து வருந்துகிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பழைய குற்றாலத்துக்குச் சுற்றுலா வந்த மக்கள் அரப்பு, ஆவாரம்பூ, இலைகளால் செய்த குளியல் பொடி, பாசிப்பயறு மாவு என்று உடலில் பூசிக் குளித்தார்கள். அன்றைக்கு அருவியில் கரைந்த கழிவுகள் ஆற்றில் வாழ்ந்த உயிர்களுக்குக் கரிம உணவாக மாறின. இன்றைக்கு நிலைமையே வேறு. அருவியின் பக்கம் போனாலே குமட்டுகிறது என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.
நீதிமன்ற உத்தரவு
இந்தப் பின்னணியில் காடு, அருவிப் பகுதிகள், மலை சார்ந்த இடங்களிலுள்ள இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் வகையில் ‘தமிழகச் சுற்றுச்சூழல் கூருணர்வு, பாரம்பரியப் பகுதிகள் பாதுகாப்பு ஆணையம்" (Tamilnadu Authority for preservation of ECO Sensitive and Heritage Areas) என்ற அமைப்பை முதல்வர் தலைமையில் ஏற்படுத்துவதற்கான சட்ட முன்வரைவை வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யத் தமிழக அரசு ஆயத்தமாக உள்ளது.
இதன் பொருட்டு நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப் பையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு 33 அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவிகளில் ஷாம்பு, சோப்பு, சீயக்காய், எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுக்கடைகள்
பேரருவி அருகில் பேருந்து நிலையத்தை ஒட்டியிருந்த இரண்டு ‘டாஸ்மாக்' மதுக்கடைகளும் மூடப்பட்டன. சாரல் தொடங்கும் நேரத்தில் இந்த இரண்டு கடைகளிலும் நாள் ஒன்றுக்கு ரூபாய் ஆறு லட்சத்தி லிருந்து எட்டு லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறதாம். அருவிகளில் உடைக்கப்பட்டுக் கிடக்கும் ஆயிரக் கணக்கான மதுப்புட்டிகளின் கண்ணாடி சிதறல்களில் இருந்து, இனிமேலாவது காயம் அடையாமல் இருக்கலாம் என்று மேற்கண்ட அறிவிப்புகளால் ஆறுதல் அடைகிறார்கள் அருவியில் குளிக்க வரும் பெண்கள்.
மூடப்பட்ட இரண்டு கடைகளையும் ஒரே கடையாகத் திறக்கத் தென்காசி - குற்றாலம் சாலையில் நன்னகரம் என்ற இடத்தில் கடை அமைக்க டாஸ்மாக் நிறுவனம் முயற்சிக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் ‘கடை அமையும் இடத்துக்கு அருகே பள்ளியும் ஆறும் உள்ளன. கடை அமைத்தால் மாணவர்களுக்கும் பெண்களுக்கும் இடையூறாக இருக்குமென்று’ எதிர்ப்பு தெரிவிக்கக் குற்றாலம் பகுதி வியாபாரிகளும் கடையடைப்பு செய்தார்கள்.
முறைப்படுத்துதல்
மக்கள் திரளும் எல்லாச் சுற்றுலாத் தலங்களிலும் இத்தகைய பிரச்சினைகள் எழவே செய்கின்றன. இயந்திரத்தனமான வாழ்விலிருந்து தங்களை ஆற்றுப்படுத்திக்கொள்ள இயற்கை சூழ்ந்த இடங்களை நோக்கிப் பயணிப்பது வழக்கமாக உள்ளது. அதே நேரம் பசுமையும் பல்லுயிர் வளமும் நிறைந்த பகுதிகளை, வெறும் சுற்றுலாத் தலமாகப் பாவித்து நாசம் செய்வதை எந்தப் பண்பாட்டில் சேர்க்க முடியும்?
உண்மையாகவே குற்றால அருவியின் இயற்கை வளத்தை, தொன்மையான வரலாற்றைப் பாதுகாக்க அரசு முன்வருமானால் முதலில் சுற்றுலாவை வரை முறைப்படுத்த வேண்டும்.
கூட்டம் கூட்டமாகக் குளிப் பதைத் தவிர்த்து, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் குளிக்க, வரிசையில் செல்ல ஏற்பாடு செய்யலாம். மது அருந்திவிட்டுக் குளிப்பதை அனுமதிக்கக்கூடாது. குழந்தைகளை வலுக்கட்டாயமாகக் குளிப்பாட்டுவதைத் தடுக்கலாம். தடை செய்யப்பட்ட ஷாம்பு, சோப்பு, சீயக்காய், எண்ணெய் போன்ற பொருள்களின் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எக்காரணம் கொண்டும் தளர்த்தக்கூடாது. முறைப்படுத்தும் நடவடிக்கைகளில் காவல்துறை கண்டிப்பு குறையக் கூடாது.
‘அழுக்கு போக்கிகள்' இல்லாத குளியல்தான் நமக்கும் நல்லது, அருவிக்கும் நல்லது. உடலில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஆற்றில் வாழும் உயிரினங்களுக்குக் கேடு பயப்பதுடன் சோப்பு, ஷாம்புகளைப் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் ஞெகிழி (பிளாஸ்டிக்) குப்பைகளால் நீரும் நிலமும் மாசுபடாமல் இருக்கும்.
குற்றாலத்தில் குளித்து முடித்த பின் இந்த எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்க ஊர் திரும்பிய போது, கொளுத்தும் வெயிலில் வியர்வை சொட்டச்சொட்ட 'நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்' என்று விவசாயிகள் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பொருட்படுத்தாமல் சுற்றுலா வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு குற்றாலம் நோக்கி விரைந்து கொண்டிருந்தன. மௌனமாகப் பார்க்க மட்டுமே என்னால் முடிந்தது.
கட்டுரையாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர்- தொடர்புக்கு: kurinjisadhasivam@gmail.com
Thanks The Hindu
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment