நெல்லை பேட்டை பகுதி இந்து முன்னணி தலைவராக இருப்பவர் வினோத். இவருக்கும் இவரது உறவுப் பெண் பேச்சியம்மாள் என்ற பிரசன்னா என்பவருக்கும் நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகரில் இன்று காலை திருமணம் நடப்பதாக இருந்தது. இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவதற்காக இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் நேற்றே நெல்லை வந்தார்.
இந்த நிலையில் நேற்று நெல்லை தாசில்தாருக்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. அதில் மணப்பெண் பேச்சியம்மாளுக்கு 17 வயதுதான் ஆகிறது. எனவே திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள் என்று கூறப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து நெல்லை தாசில்தார் பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்து வந்த திருமண மண்டபத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மணப்பெண்ணுக்கு 17 வயது முடிந்து 2 மாதம் மட்டுமே ஆகியிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் திருமணம் நடத்த தடை விதித்தனர். இதனால் இன்று காலை நடக்க இருந்த திருமணம் நின்றது. ஆனால் பெரியோர்கள் திருமண விழாவுக்கு பதிலாக இன்று நிச்சயதார்த்த விழாவாக நடத்தினார்கள். இதில் மணமகனும், மணமகளும் கலந்து கொண்டனர்.
இந்த நிச்சயதார்த்த விழாவில் இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment