போரூர் மவுலிவாக்கத்தில் மதுரையைச் சேர்ந்த ‘‘பிரைம் சிருஷ்டி’’ நிறுவனம் கட்டி வந்த 11 மாடி கட்டிடம் கடந்த 28–ந்தேதி இடிந்து விழுந்து தரைமட்டமானது.
இந்த விபத்தில் 61 பேர் பலியானார்கள். 27 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூந்தமல்லி உதவி கமிஷனர் சுப்பிரமணி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளரான மதுரையைச் சேர்ந்த மனோகரன், அவரது மகன் முத்து காமாட்சி, கட்டிட வடிவமைப்பாளர் அடையாறு விஜய் பர்கோத்ரா, மதுரை என்ஜினீயர் வெங்கட சுப்பிரமணி, சைட் என்ஜீனியர் மதுரை சங்கர் ராமகிருஷ்ணன், திருத்துறைப்பூண்டி துரை சிங்கம் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் மனோகரன், சங்கர், துரைசிங்கம் ஆகிய 3 பேரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணை முடிந்ததால் நேற்று அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
நேற்று விஜய்பர்கோத்ரா, சுப்பிரமணி ஆகியோர் 5 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கட்டிட விபத்து தொடர்பாக நேற்று மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த பால குருசாமி (52), சைட் என்ஜினீயர் கடையநல்லூர் கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பால குருசாமி பிரைம் சிருஷ்டி கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர், கட்டிட உரிமையாளர் மனோகரனின் மைத்துனர். பாலகுருசாமி பெயரில் தான் கட்டிடம் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
கட்டிடம் இடிந்து விழுந்த அன்று ‘‘இடிதாக்கி தான்’’ கட்டிடம் இடிந்தது. இதற்கு நாங்கள் எப்படி பொறுப் பேற்க முடியும் என்று தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிருபர்களுக்கு பாலகுருசாமி பேட்டி அளித்தார். பின்னர் தலைமறைவானார். இப்போது அவரை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment