நெல்லை மாவட்ட வன்னியர் சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது. பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, இணை பொது செயலாளர் இசக்கி, துணை பொது செயலாளர் பிரமலை குமாரசாமி, கரூர் பாஸ்கரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:–
தற்போதைய சூழ்நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. ஆட்சியை பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு நடந்தால் கட்டணமில்லா கல்வி, தரமான கல்வி, முற்றிலும் இலவசமான கல்வியை பா.ம.க. அளிக்கும். அ.தி.மு.க., தி.மு.க. மாறிமாறி ஆட்சியை பிடித்தாலும் மக்களுக்காக உழைக்காமல் சுய லாபத்துக்காக செயல்படுகிறார்கள். குறிப்பாக விவசாயிகளை மத்திய– மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. அவர்களுடைய வேதனைகளை புரியாமல் உள்ளனர்.
தமிழகத்தில் மாணவர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளது வேதனையை தருகிறது. சாராயத்தை ஒழிப்பதற்காக எந்த தலைவர்களும் போராடவில்லை. ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக போராடி வருகிறேன். அனைத்து தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றால் தான் பூரண மதுவிலக்கை கொண்டு வர முடியும். பெண்களின் திருமண வயதை 21–ஆக உயர்த்த வேண்டும். காதல் திருமணம் காணாமல் போய்விடுகிறது. இளைஞர்களிடம் உள்ள குடிப்பழக்கத்தை ஒழித்தால் தமிழகம் சிறப்பான நிலையை நிச்சயம் அடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் குற்றாலம் நகரை சுத்தமாக வைத்துக்கொள்ள நீதிமன்றமும், அரசும் மேற்கொள்ளும் முயற்சிகளை வன்னியர் சங்கம் வரவேற்கிறது. அதே நேரத்தில் குற்றாலத்தின் அழகை சீர்கெடுக்கும் வகையிலும் நகர் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment