கடையநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு 6 மாதங்கள் கடந்த பின்பும் தனிவட்டம் தொடங்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுதொடர்பான அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடையநல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் அமைக்க வேண்டுமென கடந்த 1989 முதல் தொடர்ந்து பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். அப்போதைய எம்.எல்.ஏ. கதிரவன் முதல், கடந்த முறை கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பீட்டர்அல்போன்ஸ் வரை தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பூ.செந்தூர்பாண்டியன், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சராக பொறுப்பேற்ற (தற்போது தமிழக அமைச்சர்) பின்னர் 7-9-2011இல் கடையநல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் அமைப்பது தொடர்பான கோரிக்கையை முன்வைத்தார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கடையநல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனிவட்டம் அமைப்பது தொடர்பான பரிந்துரையை அரசுக்கு அனுப்பியது. ஆனால் அதில் 25 வருவாய்க் கிராமங்களே இடம்பெற்றிருந்தன. 30 கிராமங்கள் இடம் பெற வேண்டும் என்பதால் தனி வட்டம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் 13-6-2014இல் நடைபெற்ற உயர்நிலைக்குழு கூட்டத்தில் 30 வருவாய்க் கிராமங்களை உள்ளடக்கிய வகையில் புதிய பிரேரணை அனுப்ப தெரிவிக்கப்பட்டதையடுத்து புதிதாக கருத்துருக்கள் அனுப்பப்பட்டன. இதையடுத்து கடையநல்லூர் தொகுதி மக்களின் 25 ஆண்டு கால கனவான தனிவட்டத்தை அமைக்க அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆகஸ்ட் மாதம் பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்.
இதையடுத்து தென்காசி, செங்கோட்டை, சிவகிரி, சங்கரன்கோவில் ஆகிய வட்டங்களிலிருந்து வருவாய்க் கிராமங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்படவுள்ள கடையநல்லூர் தனிவட்டத்தில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி 30 வருவாய்க் கிராமங்கள் கடையநல்லூர் வட்டத்தில் இருக்கும். மேலும் புதிய வட்டம் 520.71 சதுர கி.மீ. பரப்புடன் 3,14,690 மக்கள் தொகை உள்ளதாக அமையும் என வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து வட்ட அலுவலகம் செயல்படுவதற்கு வசதியாக தாற்காலிக கட்டடங்களை தேடும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் இதுவரை தனி வட்டம் தொடர்பான அரசாணை வெளியிடப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, கடையநல்லூர் வட்டம் தொடர்பான அரசாணையை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment