பாகிஸ்தானின் வடமேற்கே பெஷவார் நகரில் தாலிபான்கள் நடத்தியத் தாக்குதலில் 126 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மாகாண முதல்வர் தெரிவித்துள்ளார்.
பெஷாவர் பகுதியில் இராணுவத்தால் நடத்தப்படும் பள்ளிக்கூடம் ஒன்றைக் கைப்பற்றிய தாலிபான் தீவிரவாதிகள் அங்கிருந்தவர்கள் மீது நடத்தியத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிறார்கள் என கைபர் பக்தூன்க்வா மாகாண முதல்வர் கூறினார்.
துணை இராணுவப் படையினர் போல உடையணிந்த ஐந்து அல்லது ஆறு பேர் அந்தப் பள்ளிக்கூடத்தில் நுழைந்து கண்மூடித் தனமாகத் தாக்குதல் நடத்தினர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த முற்றுகை மற்றும் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தானிய பாதுகாப்பு படையினர் முயற்சிகளை செய்து வருகின்றனர்.
வடக்கு வாசிரிஸ்தான் மற்றும் கைபர் பிராந்தியத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக அரசு எடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று பாகிஸ்தானியத் தாலிபானின் பேச்சாளர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் பெஷாவர் நகரிலுள்ள ராணுவத்தினர் நடத்தும் பள்ளிக்குள் செவ்வாய்க்கிழமை புகுந்த தலிபான் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 132 மாணவர்கள் உள்பட 141 பேர் உயிரிழந்தனர்.
இந்தப் பள்ளிக்குள், தலிபான் தற்கொலைப் படையினர் 7 பேர், ராணுவச் சீருடையில் பாகிஸ்தான் நேரப்படி காலை 10.30 மணிக்கு நுழைந்தனர். ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று அந்தப் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். அவர்களில் சிலர், தங்கள் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்தக் கொடூரத் தாக்குதலில், 132 மாணவர்களும், பள்ளி ஊழியர்கள் 9 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இத் தாக்குதலில் 130 பேர் காயமடைந்தனர்.
தாக்குதல் நிகழ்த்திய அனைத்து பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அண்மைக்கால வரலாற்றில், பள்ளிக் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமான இந்தத் தாக்குதல், உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டினர்: தாக்குதலிலிருந்து தப்பிய ஒரு மாணவர் கூறுகையில், பயங்கரவாதிகள் வெளிநாட்டினரைப் போன்று தோற்றமளித்ததாகவும், அரபி மொழியில் பேசியதாகவும் தெரிவித்தார். மேலும், சல்வார் கமீஸ் அணிந்திருந்த அவர்கள், நீளமான தாடி வைத்திருந்ததாகவும் அந்த மாணவர் கூறினார். உயிரிழந்தவர்களின் உடல்கள், அருகிலுள்ள "லேடி ரீடிங்' மருத்துவமனையிலும், ஒருங்கிணைந்த ராணுவ மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதிகளில் ஒருவர் தன்னுடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது.
பிணைக் கைதிகள், மனிதக் கேடயங்கள்: இது தவிர, ஏராளமான மாணவர்களை பிணைக் கைதிகளாகச் சிறைபிடித்த பயங்கரவாதிகள், ராணுவத் தாக்குதலில் இருந்து தப்ப அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர்.
3 நாள் துக்கம்: இதற்கிடையே, இந்தத் தாக்குதலையொட்டி பெஷாவர் நகரம் அமைந்துள்ள கைபர்-பாக்துன்கவா மாகாணத்தில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அந்த மாகாண முதல்வர் பர்வேஸ் காட்டக் கூறினார்.
ராணுவம் சுற்றிவளைப்பு: தாக்குதலுக்கு உள்ளான பள்ளியை ராணுவம் சுற்றி வளைத்தது. போலீஸாரும், ராணுவத்தினரும் அந்தப் பகுதியையும், அருகிலுள்ள அனைத்து சாலைகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து, நீண்ட நேரம் நடைபெற்ற சண்டையில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

கோழைத்தனமான செயல்
புது தில்லி, டிச.16: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "அந்தச் செயல் கோழைத்தனமானது; சொல்ல முடியாத அளவுக்கு கொடூரம் நிறைந்த ஈவு இரக்கமற்ற செயல்' எனச் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக சுட்டுரை (டுவிட்டர்) சமூக வலைப்பக்கத்தில் அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பெஷாவரில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவொரு சொல்லவியலாத கொடூரம் நிறைந்த ஈவு இரக்கமற்ற செயலாகும். இத்தாக்குதலில், அப்பாவிகளான பள்ளிக் குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
இன்றைய சம்பவத்தில், தங்களுக்குப் பிரியமானவர்களை பறிகொடுத்த அனைவருக்காகவும் எனது மனம் வருந்துகிறது. அவர்களின் வேதனையை பகிர்வதுடன், அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷெரீஃப் உடன் பேச்சு: இந்தச் சம்பவம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மோடி, இந்தியா சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வேதனையையும் தெரிவித்தார். பாகிஸ்தானுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
பள்ளிகளில் மெளன அஞ்சலி: பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இந்தியாவிலுள்ள பள்ளிகள் அனைத்திலும் புதன்கிழமையன்று 2 நிமிட மெளன அஞ்சலி கடைப்பிடிக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
 தலிபான் பொறுப்பேற்பு
 இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: வடக்கு வஸிரிஸ்தான் பகுதியில் எங்கள் இயக்கத்துக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் நிகழ்த்தி வரும் தாக்குதல்களுக்குப் பழிவாங்கவே பள்ளியில் தாக்குதல் நடத்தினோம். ராணுவ நடவடிக்கையில் எங்கள் குடும்பத்துப் பெண்களும், குழந்தைகளும் கொல்லப்படுகிறார்கள். அந்த வலியை ராணுவத்தினரும் உணர வேண்டும் என்பதற்காகவே இந்தத் தாக்குதலை நடத்தினோம் என்றார் அவர்.
 தேசியத் துயரம்
இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், இது ஒரு தேசியத் துயரம் என்று தெரிவித்தார்.
 அதிர்ச்சி - வேதனை
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ""பாகிஸ்தானில் நடைபெற்றுள்ள தாக்குதல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது; பள்ளி சென்ற குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருப்பது வேதனையை அளிக்கிறது'' என்றார் அவர்.
 இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கண்டித்துள்ளார்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment