அகமதாபாத்: குஜராத்தில் நடந்த மதக் கலவரம் நடந்து 12 ஆண்டுகளாகி விட்ட நிலையில், 24 முறை பதவி நீ்ட்டிக்கப்பட்ட, நானாவதி ஷா கமிஷன் தனத அறிக்கையை குஜராத் அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில், குஜராத்தில் ஏற்பட்ட மதக் கலவரத்திற்கு அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி காரணம் இல்லை. அது தானாகப் பரவிய கலவரம், மோடி கலவரத்தைத் தூண்டி விடவில்லை என்று கூறியுள்ளார் நீதிபதி நானாவதி.

கோத்ரா கலவரத்திற்கு சதியே முக்கியக் காரணம் என்றும் நானாவதி கூறியுள்ளார். 

கோத்ரா ரயில் தீவைப்புச் சம்பவம் 2002ம் ஆண்டு நடந்தது. அதன் பின்னர் குஜராத்தில் இந்து அமைப்பினரும், பாஜக உள்ளிட்ட கட்சியினரும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். 

குறிப்பாக பஜ்ரங் தளம், விஎச்பி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மிகப் பெரிய அளவில் கலவரத்தில் ஈடுபட்டனர். பல இஸ்லாமியர்களை உயிருடன் தீவைத்துக் கொளுத்தினர். இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. 2000க்கும் மேற்பட்டோர் இந்த கொடூரக் கலவரத்தில் கொல்லப்பட்டனர். 

ஓய்வு பெற்ற நீதிபதியான நானாவதி தலைமையில் இரு நபர் விசாரணைக் கமிஷனை மோடி அரசுதான் நியமித்தது. இந்த கமிஷன் கடந்த 12 வருடமாக விசாரணை நடத்தி வந்தது. 24 முறை இதற்குப் பதவி நீ்ட்டிப்பு அளிக்கப்பட்டது. ஒரு வழியாக 2400 பக்கம் கொண்ட அறிக்கையை குஜராத் முதல்வர் ஆனந்தி பென் படேலிடம் நீதிபதி நானாவதி சமர்ப்பித்தார். 

இந்த அறிக்கையில் மோடிக்கும், அவரது தலைமையிலான அரசுக்கும் இந்தக் கலவரத்தில் தொடர்பில்லை. கலவரத்தைத் தடுக்காமல் மோடி அரசு வேடிக்கை பார்க்கவில்லை. மோடிக்கு இதில் சம்பந்தம் இல்லை. துரித கதியில் மோடி அரசு செயல்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும் மோடி அரசு கலவரத்தைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது என்பதற்கு ஆதாரம் இல்லை என்றும் நீதிபதி நானாவதி கூறியுள்ளார். 

ஆனால் இந்த அறிக்கை உண்மைக்கு முற்றிலும் புறம்பானதாக உள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேசமயம், முதல்வர் ஆனந்திபென் படேல், இந்த அறிக்கை குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. 

2002ம் ஆண்டு, அயோத்தியிலிருந்து குஜராத்துக்கு வந்த கரசேவகர்கள் பயணித்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கோத்ரா ரயில் நிலையத்தில் நின்றபோது சில விஷமிகள் ரயில் பெட்டிக்கு தீவைத்து விட்டனர் இதில் எஸ் 6 பெட்டி முற்றிலும் எரிந்து சாம்பலானது. அதில் 59 பேர் கொல்லப்பட்னர். இதைத் தொடர்ந்து குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டம் மூண்டது. 

இந்தக் கலவரம் தொடர்பாக விசாரித்த நானாவதி கமிஷன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள்: 

  1. மோடிக்கோ அல்லது மோடி அரசுக்கோ 2002ல் நடந்த கலவரத்தில் எந்த வகையிலும் தொடர்பு இல்லை. 
  2. மோடி அல்லது அவரது அமைச்சர்கள் அல்லது காவல்துறை அதிகாரிகள் கோத்ரா சம்பவத்திலோ அல்லது அதன் பின்னர் நடந்த கலவரத்திலோ எந்த வகையிலும் தொடர்பு கொள்ளவில்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது. 
  3. சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு தருவதற்கு மோடி அரசு தவறி விட்டதாக கூறப்பட்ட புகாரிலும் உண்மை இல்லை. அது நிரூபிக்கப்படவில்லை. 
  4. மோடியை நேரில் அழைத்து குறுக்கு விசாரணை செய்ய போதிய காரணம் தரப்படவில்லை. சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ் 6 பெட்டி தீவைத்து எரிக்கப்பட்டது சதிச் செயலாகும். 
  5. கரசேவகர்கள் வருவதைஅறிந்து திட்டமிட்டு அந்த ரயில் பெட்டி எரிக்கப்பட்டது. இதற்காக 140 லிட்டர்பெட்ரோல் வாங்கப்பட்டுள்ளது. அதை வைத்து ரயில் பெட்டியை தீவைத்து எரித்துள்ளனர். இது குஜராத் அரசை எச்சரிக்கவும், குஜராத்தில் வன்முறையை தூண்டி விடும் நோக்கிலும் செய்யப்பட்டது. 
  6. கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த கலவரம் தானாகவே நடந்துள்ளது. யாரும் அதைத் தூண்டி விடவில்லை. 
  7. மாநில அரசு கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து உஷார் நிலையில் இருந்தது. ராணுவத்தையும் அழஐத்தது. சில இடங்களில் கலவரத்தின்போது அங்கு சில பஜ்ரங்க தளம் மற்றும் விஎச்பி தொண்டர்கள் இருந்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது குஜராத் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.



உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment