தொடர்மழை காரணமாக செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணையில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் வேகமாக வெளியேறுகிறது.

குண்டாறு அணை

நெல்லை மாவட்டம் செங்கோட்டை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் குண்டாறு அணை உள்ளது. அணையின் உயரம் 36.10 அடியாகும். தண்ணீர் கொள்ளளவு 25 மில்லியன் கன அடியாகும். இந்த தண்ணீரின் மூலம் ஆயிரத்து 122 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

குண்டாற்றின் குறுக்கே மறவன்கால் அணை, சம்போடைகால் அணை, நல்லூர் கால்வாய் அணை, பண்ணிமுண்டம் கால் அணை, சந்தாகப்பட்டு அணை, தென்கால் அணை, பிரானூர் கால்வாய் அணை ஆகிய 7 அணைகள் உள்ளன. இந்த அணைகள் மூலம் 731 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகின்றன.

குண்டாற்றில் இருந்து உபரியாக வெளியேறும் தண்ணீரை சேகரித்து 12 குளங்கள் மூலமாக 391 ஏக்கர் நிலம் குளத்து பாசனம் பெறுகிறது. அணையை சுற்றி அமைக்கப்பட்டு உள்ள கரை அமைப்பு கற்கள் உடைந்து சிதைந்து கிடக்கிறது. அணையை பராமரிப்பதற்கு 17 ஊழியர்கள் இருந்தனர். தற்போது, 2 ஊழியர்கள் மட்டும் உள்ளனர். இந்த அணையை பார்வையிடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவார்கள். ஆனால் அவர்களுக்கு அங்கு போதிய பாதுகாப்பு எதுவும் இல்லை என்று கூறுப்படுகிறது.

அணையில் விரிசல்

இந்த நிலையில் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக குண்டாறு அணையில் விரிசல் ஏற்பட்டு, ஓட்டை விழுந்து உள்ளது. இதன் வழியாக தண்ணீர் வேகமாக வெளியேறுகிறது. அணை நிரம்பி மறுகால் வழியாக தண்ணீர் வெளியேறும் நிலையில், அணையில் ஏற்பட்ட ஓட்டை வழியாகவும் தண்ணீர் வேகமாக வெளியேறி வருகிறது.

இந்த அடைப்பை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு சரி செய்ய வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அணையில் விரிசல் ஏற்பட்டு அணை உடையும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment