தென்காசி புதிய பஸ் நிலையத்தில் நேற்று நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதனை கண்டித்து கடை வாடகைதாரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி நகராட்சி புதிய பஸ் நிலையத்தில் 60க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை நேற்று நகராட்சியினர் அகற்றினர். இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. காலை பத்து மணிக்கு துவங்கிய ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மாலை வரை நீடித்தது. இந்நிலையில் மாலையில் புதிய பஸ் நிலையத்தில் கடை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிற வியாபாரிகள் நகராட்சியை கண்டித்தும், எழுத்துப்பூர்வமான அறிவிப்பு எதுவும் கொடுக்காமல் இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதாகக்கூறி தென்காசி மதுரை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் இன்ஸ்பெக்டர்கள் ஆடிவேல், தனபாலன், ஜமால், நகராட்சி ஆணையாளர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர். இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் முஜிபுர் ரஹ்மான் கூறுகையில், தென்காசி புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் நடந்து செல்லும் நடை மேடை முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு இடையூறாக இருப்பதாக முதல்வரின் தனிப்பிரிவு, கலெக்டர் ஆகியோருக்கு புகார் வந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட புதிய பஸ் நிலைய வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை அழைத்து மூன்று முறை பேசியிருக்கிறோம். இருந்தும் அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற முன்வரவில்லை. தற்போது அகற்றப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் தவிர எஞ்சியுள்ள ஆக்கிரமிப்புகளும் இடைத்தேர்தலுக்கு பிறகு அகற்றப்படும் என்றார். புதிய பஸ் நிலைய ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் மறியல் சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment