“நீங்க முன்னாடி சொல்லும் போது மக்கள் வர்ரதில்ல. இயக்கங்கள் தான் வாரங்கனு சொன்னீங்க. இங்க குடிச்சிட்டு குத்தாட்டம் போடுறது எல்லாம் ஆர்.எஸ்.எஸ் தான் இல்ல?”

நாம் அங்கே செல்லும் போது ஆர்.எஸ்.எஸ்-ன் சவுண்டு சர்வீஸ் பிரபலம் எச்.ராஜா பேசிக் கொண்டிருந்தார்.
“நம்மை அந்தத் தெரு (ஐஸ் ஹவுஸ் மசூதி) வழியே செல்ல தடை விதிக்கிறார்கள். முஸ்லீம்கள் இந்தப் பகுதி வழியே வரக்கூடாது என்று இந்துக்கள் நாம் தடை விதித்தால் என்னவாகும்” என்றதும் கூட்டம் “பாரத்மாதா கி ஜெய்” என்று வெறியுடன் சத்தமிட்டது. அதாவது இந்துமுன்னணியினர் பல ஆண்டுகளுக்கு முன்பு திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதி பள்ளிவாசலில் கலவரம் செய்ததால் அந்தத் தெரு வழியே மதவெறி ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அதை வைத்து மதவெறியை கிளப்ப முயற்சிக்கிறது ஆர்.எஸ்.எஸ் கூட்டம்.
“நாய் செல்கிறது, பன்னி செல்கிறது, ஆனால் நாம் செல்லக் கூடாது என்று தடை விதிக்கிறார்கள்” என்று தம் முன்னால் அமர்ந்திருக்கும் சிந்திக்கத் தெரியாத பார்ப்பன அடிமைகளிடம் நஞ்சை கக்கி பேச்சை முடித்தார், எச் ராஜா. சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரை பல நூறு ஆண்டுகளாக தெருவுக்குள் நுழையக் கூடாது, தண்ணீர் எடுக்கக் கூடாது என்று மனித உரிமைகளை மறுத்து சட்டம் செய்த பார்ப்பன ஆதிக்க சாதிக் கூட்டம் இதை பேசுவது நல்ல வேடிக்கை.
“நாய், பன்னி போறத பத்தி பேசும் எச்.ராசாவே, சங்கராச்சாரி, தேவநாதன் மாதிரியான நாய், பன்றிகள் கருவறைக்குள் செல்லும் போது எங்களை அனுமதிக்க மறுக்கிறாயே?” என்று கேட்கும் பகுத்தறிவு, கேட்டுக் கொண்டிருந்த அடிமைகளுக்கு இல்லை.
அடுத்து தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி ராமகிருஷ்ணா ஆசிரமத்தை சேர்ந்த ராமானந்த மகராஜ் சுவாமிகள் என்ற ஒரு சாமியார் பேச ஆரம்பித்தார். சாமியார் ஏதாவது ஆன்மீகம் பேசுவார் என்று பார்த்தால் எச்.ராஜா பேசியதை விட அதிகமாக மதவெறியை கக்கினார். “நட்சத்திரத்தை பார்த்து ‘அறிவியல்’ முறைப்படி பிறந்த நாள் கொண்டாட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். “பகுத்தறிவு என்று பெயரில் இந்து இளைஞர்களை மூளைச்சலவை செய்தது இனியும் செல்லுபடியாகாது. இளைஞர்கள் விழிப்படைந்து விட்டார்கள். தி.க இன்று ஆளில்லாத அநாதை கூட்டமாகி விட்டது. ஆனால், மோடிக்கு இளைஞர்கள் ஆதரவு அமோகமாக இருக்கிறது. பிஜேபியை இளைஞர்கள் ஆதரிக்கிறார்கள். அவர் தன்னை ஒரு இந்து பிரதமர் என்று பெருமையாக அழைத்துக் கொள்கிறார்” என்று இந்துத்துவ ஆட்சியின் ‘பெருமை’களை அளந்து கொட்டினார்.
சென்னையில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலைகளின் பின்னே தனிப்பெரும் கதைகளும், சதித்திட்டங்களும் இருக்கின்றது. அதை பின்னர் பார்ப்போம். ஆனால் இந்த பிள்ளையார் சிலை ஊர்வலங்களுக்கு மட்டுமல்ல, தெருக்களில் வைக்கப்பட்ட பிள்ளையாரை வணங்குவதற்கும் பல ‘செலவுகளை’ செய்தே பக்தர்களையும், தொண்டர்களையும் இழுக்க வேண்டியிருந்தது.
அந்த சாமியார் பேசியதும், ஊர்வலம் புறப்பட்டது. பிள்ளையாரை கிளப்புவதற்கு போலீசார் படாதபாடுபட்டார்கள்.
மூடப்பட்டிருந்த கடைகள்
மூடப்பட்டிருந்த கடைகள்
முதலில் ஐந்தாறு பிள்ளையாருடன் ஆரம்பித்த ஊர்வலம், நகரும் போது குறுக்கு சந்துகளில் இருந்த வந்த பிள்ளையார்களுடன் சேர்ந்து எண்ணிக்கை கூடியது.
மையமான பிள்ளையார் சிலை ஊர்வலத்தின் இறுதியில் இழுத்து வரப்பட்டது. இதைச் சுற்றி இந்து முன்னணியின் தலைவர்கள் இருந்தனர். ஊர்வலத்தின் மொத்த கூட்டத்தில் ஆறு நபர்கள் மட்டும் தான் “ஓம் காளி, ஜெய் காளி” என்று பிள்ளையார் முன்பு கோசம் போட்டுக் கொண்டு வந்தார்கள்.
ஒவ்வொரு பிள்ளையாரின் முன்பும் மேளதாளமும், அதற்கேற்ப இளைஞர்களின் குத்தாட்டமும் கனஜோராக நடந்தது கொண்டிருந்தது. டாஸ்மாக் பற்றி திராவிட இயக்கங்களை பழிக்கும் இந்துத்துவ கும்பல் இளைஞர்களை குத்தாட்டம் போட வைக்க அதே டாஸ்மாக் சரக்கை ஊற்றிக் கொடுத்ததது. இதில் ஆகப் பெரும்பான்மையானவர்கள் பதின்ம வயதினர். நேரம் ஆக ஆக ஆபாசமான உடல் அசைவுகளும், பெண்ணைப்போல வேடமிட்டு ஆடியவர் சேலையை அவிழ்ப்பது எனவும் அவர்களது போதை ஆட்டம் எல்லை மீறி சென்று கொண்டிருந்தது.
மெயின் பிள்ளையார் போகும் பாதையில்  முன்னால் சென்ற பிள்ளையார் ஒற்றை மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தார். மாட்டின் முதுகில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து வைத்திருந்தார்கள். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட பக்தர் ஒருவர் மாட்டை கொஞ்சுவது போல அதனுடன் முட்ட ஆரம்பித்தார். மாடு கொஞ்சம் கலவரமாகி இரண்டாவது மூன்றாவது முறையில் தன்னுடைய எதிர்ப்பை காட்ட ஆரம்பித்தது. ‘கோமாதாடா விளையாடத’ என்று சொல்லி இழுத்து விட்டு மாட்டின் தலையை தடவிக் கொடுக்க போனார், இன்னொருவர். அவரையும் மாடு எதிர்க்க ஆரம்பித்தது. இதற்கிடையில் யாருடைய குத்தாட்டம் பெரிய தெரு சந்திப்பில் சிறப்பாக இருக்கிறது என்ற போட்டியில் இரு இந்து பிரிவினரிடையே சிறிய சண்டை ஆரம்பித்த்து. தடுக்க வந்த போலீசை நெஞ்சில் கைவைத்து தள்ளினார்கள் பொறுப்பாளர்களான இளைஞர்கள்.
ஒரு பிள்ளையாரின் முன்பு ஆடிக்கொண்டிருந்தவர்கள் திருநங்கைகளை அழைத்து வந்திருந்தனர். அவர்களும் ஆடிக் கொண்டிருந்தார்கள். ஒரு இளைஞர் தன்னுடைய சட்டைப் பையில் இருந்த ரூபாய் நோட்டுகளை ஒரு திருநங்கையிடம் நீட்டியபடியே ஆடினார். அவரும் அதை வாங்க முயற்சி செய்தபடி ஆடிக் கொண்டிருந்தார். இருவரும் ஆபாசமான உடலசைவுகளுடன்தான் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
பாதி மூடப்பட்ட கடைகள்
ஊர்வலம் போகும் சில மணி நேரத்துக்கு பாதி மூடப்பட்ட கடைகள்
சற்று நேரத்தில் அந்த இளைஞர் பணத்தை தன்னுடைய ஜட்டியினுள் நுழைத்து அதை எடுக்கும்படி சவால் விட்டார். அந்த திருநங்கையும் அதை எடுப்பதற்கு முயற்சி செய்தார். இந்துக்களை திரட்ட பிள்ளையாரும், இந்து முன்னணி கும்பலும் எத்தகைய ‘தியாகங்களை’யெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது? வரும் காலத்தில் ஐபிஎல் சியர்ஸ் லீடர்ஸ் பெண்கள் கூட இறக்குமதி செய்யப்படலாம். அதை மல்லையாவும் ஸ்பான்சர் செய்யலாம்.
மற்றொரு பிள்ளையாரின் முன்பு, அதிமுகவின் மகளிர் அணியினரை மிஞ்சிவிடும்படி குத்தாட்டத்தில் பின்னி பெடலெடுத்துக் கொண்டிருந்தனர் சில பெண்கள். இவர்கள் அனைவருமே சூத்திர அல்லது பஞ்சம உழைக்கும் பெண்கள் தான். அருகில் இருக்கும் குடிசைப் பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்டிருக்கலாம். இவர்கள் ஆடுவதை பார்ப்பனப் பெண்களும் ஆண்களும் சாலை ஓரங்களில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். இந்து தர்மம் எப்படி தீயாய் பரவுகிறது என்ற வெற்றிக் களிப்புடன் அவர்கள் சிரித்திருக்க வேண்டும்.
“எல்லோரும் இந்துதானே, பின்னர் ஏன் பாப்பனத்தி குத்தாட்டம் ஆடுவது இல்லை. சூத்திர உழைக்கும் பெண்களையும், திருநங்கைகளையும் ஆடவைக்கிறார்கள்” என்று தங்களை இந்து என்று கருதிக் கொள்வோர் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஜட்டிக்குள் பணம் எடுப்பதோ, இல்லை பாலியல் வெறியை நிகழ்த்தும் உடல் அசைவுகளோ சூத்திர, பஞ்சம சாதிகளுக்கு மட்டும்தான் சொந்மென்றால் அங்கே இந்து ஒற்றுமை அடிபடுகிறது. இந்த காட்சியில் அவாள்களும், ஷத்ரியர்களும், வைசியர்களும் இடம் பெற்றால்தான் இந்து தர்மத்துத்துக்கும் மதிப்பு, ஜட்டிக்கும் மதிப்பு!
“எந்த பாப்பானாவது சாமியாடி பாத்திருப்பீர்களா? பேய்பிடித்து ஆடுவதை பார்த்திருப்பீர்களா? நம்மாளு தான் ஆடுறான்” என்ற பெரியாரின் வார்த்தைகளை பொய்ப்பிக்கவாவது இந்ந இந்து ஒற்றுமைக்கு இந்துத்துவ அறிஞர்கள் முயல வேண்டும்.
தற்போது ஊர்வலம் பிரதான சாலையை அடைந்திருந்தது. இநத ஊர்வலத்தை ஒட்டி பெரும்பாலான கடைகள் அச்சத்தின் காரணமாக அடைக்கப்பட்டிருந்தன. சில கடைகள் ஷட்டரை பாதி வரை அடைத்து வைத்திருந்தனர். தெருவோர கடைகள் மூட்டைகட்டி வைக்கப்பட்டிருந்தன.
“ஏம்மா கடைய எல்லாம் பூட்டி வெச்சிருக்காங்க” ஒரு தெருவோர வியாபாரிடம் கேட்டோம்.
“அதாம்பா ஊர்வலம் வுடுறாங்கல்ல. அதுக்குத்தான்.”
“எதும் பண்ணிருவாங்கன்னா?”
“ஆமா. வியாபார சங்கத்திலிருந்து சொல்லிட்டாங்களாம். ஊர்வலம் உடுற ரெண்டு மணிநேரம் கடைய அடைச்சிருங்க. அடைக்காம அப்புறம் வந்துட்டு அது இதுனு சொன்னா நாங்க எதும் பண்ண முடியாதுனு சொல்லிட்டாங்களாம். நாங்களும் மூடிட்டோம்”
மசூதி முன்பு வெறிக்கூச்சல்
மசூதி முன்பு வெறிக்கூச்சல்
ஊர்வலம் மிகமிக மெதுவாக ஊர்ந்து சென்றது. வேண்டுமென்றே மெதுவாக நகர்த்தினார்கள். ஒவ்வொரு பிள்ளையாரின் முன்பும் கழுத்தில் விசிலுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் விசில் அடித்தால் பிள்ளையாரை இரண்டு அடி நகர்த்துகிறார்கள். மீண்டும் விசில். பிள்ளையார் நகருவதில்லை. ஒவ்வொரு பிள்ளையாருக்கும் இடையில் பல நூறு மீட்டர் தூரம் இடம் காலியாக இருந்தது. ஆனாலும் வண்டியை நகர்த்தாமல் காலம் தாழ்த்தினார்கள். விசில் வைத்திருப்பவர்கள் இதைத் திட்டமிட்டு செய்தார்கள்.
போலீசார் அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். “தயவு செய்து நகத்துங்கப்பா. பாருங்க அந்த பிள்ளையார் எங்க போயிருச்சினு. நகத்துப்பா நகத்து”. உழைக்கும் மக்கள் காவல் நிலையம் சென்றால் கிள்ளுக்கீரையாக மதிக்கும் காவல்துறை இந்துத்துவ கும்பலை கண்டு பம்மியதும், மன்றாடியதும், கெஞ்சியதும் தனிக்கதை.
கடந்த பத்து நாட்களாகவே இப்படித்தானாம். நகரெங்கும் பிள்ளையார் சிலைகளுக்கு காவலாக நிற்க வைக்கப்பட்டிருந்த இந்த வீரர்கள், “உக்கார சேரு தரமாட்டுறாங்கப்பா. போலீசு ஜீப்ல கேரம் விளையாடுறாங்க. பொம்பளைங்க இந்த பக்கம் வரதில்லை, பாத்தீங்களா? எங்களுக்கு லீவு இல்ல தம்பி. வீட்டம்மாவுக்கு காய்கறி வாங்கி குடுக்கக் கூட போக முடியல. பத்திரிகைகல எழுதுங்க” என்று புலம்பினார்கள். அது குறித்து தனியே எழுதுகிறோம்.
ஊர்வலத்தில் வந்தவர்கள் போலீசை கிஞ்சித்தும் மதிக்கவில்லை. அதிலும் குறிப்பாக பெண் போலீசின் நிலைமை மோசம்.
“தம்பி, கரைக்கப்போற பிள்ளையாரு தான. அதுக்கு ஏன் இவ்வளவு நேரம். தயவு செய்து நகர்த்துப்பா” இது ஒரு பெண் காவலர்.
ஒரு சிறுவனிடம் ஒரு பெண் போலீஸ் அதிகாரி “ஒரு ஆபீசரையே இப்படி பேசுறியே. நீ எல்லாம் உருப்படுவியா” என்று சாபம் விட்டுக் கொண்டிருந்தார். உழைக்கும் மக்களை கடித்துக் குதறும் போலீசு இங்கே இந்துத்துவ பொறுக்கிகளிடம் பங்களா நாய் போல கட்டுப்பட்டு சென்றது.
பிள்ளையார் ஊர்வலத்தால் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களும் அரசியல் இயக்கங்களும் அரசியல், பொருளாதார கோரிக்கைகளுக்காக சாலையை மறித்து போராடினால் “லெட்டர் டூ எடிட்டர்” எழுதி புலம்பும் பார்த்தசாரதிகள் வீதிகளிலும், வீடுகளின் மொட்டைமாடிகளிலும் நின்று கொண்டு ஊர்வலத்தை பெருமிதத்துடன் கண்டு களித்துக் கொண்டிருந்தனர்.
மசூதி முன்பு தேங்காயை சூறை
மசூதி முன்பு ஹால்ட்
கடைசி விநாயகரின் அருகில் கோசம் போட்டுக்கொண்டிருந்த சிலரும் இப்போது சுணங்கியிருந்தனர்.
“ஜீ நீங்க போடுங்கஜி”
“அந்தா அவரு நல்லா போடுவாருஜி” என மந்தமாக சென்ற ஊர்வலத்தில் சற்று நேரத்தில் சுருதி கூடியது. முன்னால் சென்ற பிள்ளையாருக்கு முன்னால் ஆடிக்கொண்டிருந்த சில இளைஞர்கள் இப்போது பெரிய பிள்ளையாரின் அருகே கூடிக்கொண்டிருந்தனர். ஏன்?
சற்று தூரத்தில் மசூதி இருந்தது.
சரியாக மசூதிக்கு அருகே பிள்ளையார் நிறுத்தப்பட்டார். வேறு எங்கும் சாலைகளில் தேங்காய் உடைக்கப்படாத நிலையில் ஐஸ்ஹவுஸ் மசூதி வழியே செல்ல தடைவிதிக்கப்பட்ட சந்திப்பில் தேங்காய் உடைத்தார்கள். பிறகு ஒரு சாக்கு நிறைய தேங்காய் கொண்டுவரப்பட்டு மசூதி இருந்த சாலையில் உடைக்கப்பட்டது.
மசூதியின் அருகில் அவர்கள் போடும் கோசமும் அதன் சுருதியும் மாறியிருந்தது. மற்ற இடங்களில் “ஓம் காளி ஜெய்காளி”, “பாரத் மாதாகி ஜெய்” என்றும் இன்னும் சிலர் “எல்.ஐ.சி ஹைட்டு எங்க பிள்ளையாரு வெயிட்டு”, “கோக்கோ கோலா கருப்பு, எங்க பிள்ளையாரு நெருப்பு” என்றும் முழக்கமிட்டவர்கள் மசூதியின் அருகில் வந்து நின்றதும் முழக்கத்தை மாற்றினார்கள்.
“கட்டுவோம்! கட்டுவோம்! ராமர் கோவில் கட்டுவோம்.
எந்த இடத்தில் கட்டுவோம்! அயோத்தியில் கட்டுவோம்!.
இந்த நாடு! இந்து நாடு!
இந்து மக்கள்! சொந்த நாடு!.
இந்த ரோடு! இந்து ரோடு!.
இந்தக் கடை! இந்து கடை!.
பாகிஸ்தானா? பாதிரிஸ்தானா? இல்லை இல்லை ‘இந்து’ஸ்தான்!.
பாரத்மாதாகீ ஜெய்”
என்று வெறிக் கூச்சலை திரும்ப திரும்ப போட்டுக்கொண்டே இருந்தார்கள். குரலில் அப்படி ஒரு வன்மம்.
பிள்ளையார் அந்த இடத்தை விட்டு நகருவதாக இல்லை. மற்ற இடங்களில் நின்ற நேரத்தைவிட இந்த இடத்தில் பல மடங்கு கூடுதலான நேரம் நின்று வெறிக் கூச்சல் போட்ட பிறகு போலீசார் கிளம்புமாறு தொடர்ந்து கெஞ்ச பிள்ளையார் கிளப்பப்பட்டார்.
அல்லிக்கண்ணி ராஜா
அல்லிக்கண்ணி ராஜா
அல்லிக்கேணி ராஜா என்று பேனர் பிடித்துகொண்டு வந்த ஒரு குரூப்பில் சற்று வயது அதிகமாக மதிக்கத்தக்கவரை ஓரம் கட்டினோம்.
“சார், எச்.ராஜா பேசும் போது அந்த வழியா போக அனுமதியில்லைனு சொன்னாரே. என்ன பிரச்சனை சார்”.
“19 வருசத்துக்கு முன்பு அந்த வழியா, மசூதி அருகே போகும் போது செருப்பு மாலை போட்டுட்டாங்க. அதனால நாம கடைகளை புகுந்து அடிச்சிட்டோம். செம அடி அவங்களுக்கு. இதோ இந்த சோபா கடையிருக்குல்ல உள்ளே புகுந்து அடி.” முகத்தில் பெருமிதம் பொங்கக் கூறினார்.
“அதுக்கு அப்புறம் அந்த வழியா போக அனுமதி தர்றதில்லை. நாமதாங்க பாயி பாயினு சொல்றோம். அவனுங்க நம்மள சொல்றாங்களா?  ஆறு (வேல்) படம்  பாத்தீங்களா அதுல ஒரு டயலாக் வரும் ‘அவன் தான் அண்ணனு சொன்னான் நான் தம்பினு சொல்லலியே என்று’ அது மாதிரிதான்.”
“நாலுவருசம் முன்னாடி நடந்த அமைதிகூட்டத்தில ஏ.சி கிட்டே கேட்டேன். ‘சார் புட்பால் மேட்ச் பாப்பீங்களா? அதுல ரசிகர்கள் அடிச்சிப்பாங்களா? சமயங்களில் கொலை கூட நடக்குதா? அதுக்காக அதே இடத்தில் மீண்டும் மேட்ச் நடத்துறது இல்லையா? நடக்கத்தானே செய்யுது. மறுபடியும் சண்டை வரலாம். ஆனா, அத தடுக்கத்தானே நீங்க இருக்கீங்க. பாதுகாப்பு போடுங்க. அதைவிட்டுட்டு போகக் கூடாதுனு சொன்னா எப்படி?’ அவர் பதிலே பேசவில்லை.”
“நம்ம தமிழ்நாட்டில மட்டும் தான் சார் இப்படி நடக்கும். இந்தியாவுல வேற எங்கயும் இப்படி கிடையாது. மசூதி வழியா போகக் கூடாதுனு வேற எங்கயும் சொல்ல முடியாது. ஹைதராபாத்துல ரெண்டு நாளு லீவு விடுறாங்க. விநாயகர் சதுர்த்திக்கும் அதை கரைக்கும் நாளுக்கும்.”
“அதான் சென்டர்ல நம்மவா ஆட்சி வந்திருச்சே. இன்னும் ஏன் பெர்மிசன் தரமாட்டேங்கறாங்க?”
“ஆட்சி யாருங்குறது முக்கியமில்ல. மக்கள் வரணும், அதுதான் முக்கியம். நரசிம்மராவ் யாரு காங்கிரஸ். பாபர் மசூதியை இடிக்கும்போது என்ன நடந்துச்சி? போலீஸ், துணை ராணுவம் எல்லாம் (..கையைக் கட்டி காண்பிக்கிறார்.), ஒண்ணும் பண்ணல. ஏன்? மக்கள் வரணும்”
“தடையை மீறி போலாம்ல?”
“பாத்தீங்கல்ல போலீசை. வஜ்ரா வண்டி வேற வெச்சி இருக்காங்க. இயக்கமா போனா யாரா இருந்தாலும் அடிப்பாங்க. 2001-ல திமுகவே கடற்கரையில அடிவாங்குனானுக. நம்ம கூட மக்கள் வந்தாதான் போலீசால ஒண்ணும் செய்ய முடியாது.”
“இங்க இருக்கிறவங்க மக்கள் தானே?”
“இல்ல இது பல இயக்கங்கள். நான் சொல்றது மக்களை” கையைக் குவித்து, “இப்படி வீட்டுப் பிள்ளையாரை கையில் எடுத்துட்டு அவர்களும் வரவேண்டும். ஆனால் இவங்க என்ன செய்யுறாங்க. விநாயகர் சதுர்த்தி முடிந்த அடுத்த நாளே வீட்டு வாசலில் போட்டுறாங்க. அதை இரண்டு நாளு கூட வீட்டுல வைக்க மாட்டுறாங்க. வீட்டுல இருக்குறவங்க அதை கையில் பிடித்துக்கொண்டு ஊர்வலத்தில் வரணும். அப்போ தான் போலீசால நம்மள தடுக்க முடியாது.”
“நீங்க எந்த இயக்கம்?”
“ஆர்.எஸ்.எஸ். யோகா மாஸ்டர்” என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.
“சரி சரி.  ஆனா பாருங்க பசங்க இவ்வளவு ஆபாசமா குத்தாட்டம் போட்டுட்டு வாராங்க மோசமாக இல்லையா?”
“நான் என்ன சொல்றேன், அப்படியாவது அவங்க வரட்டும். டான்ஸ் ஆடுனா தான் வாராங்களா, குடிச்சிட்டு ஆடுறாங்களா? பரவாயில்லை, வரட்டும். வர்றதுதான் முக்கியம். ஒண்ணு தெரிஞ்சிக்குங்க, கெட்ட இந்துவை மாத்திறலாம், நல்ல முஸ்லீம மாத்த முடியாது.”
“ம். …. இல்ல சார் குத்தாட்டம் ரொம்ப மோசமாக இருக்கு. நம்ம கலாச்சாரத்திற்கு ஒத்துவருமா?”
(பெரிய டிரம் வாத்தியக் குழுவை காட்டி) “இதுக்கு 30,000-க்கு மேல செலவு ஆச்சி. இப்படி வெச்சாதான் ஆடுறதுக்குனு வாரங்க. இவஙக வரலைனா போலீசு நம்மளை கொஞ்ச நேரத்துல வேகமாக நகரச் சொல்லிருவான். விநாயகரை அள்ளிட்டு போயிருவான். இப்ப அப்படி சொல்ல முடியாதுல்ல.”
“நீங்க முன்னாடி சொல்லும் போது மக்கள் வர்ரதில்ல. இயக்கங்கள் தான் வாரங்கனு சொன்னீங்க. இங்க குடிச்சிட்டு குத்தாட்டம் போடுறது எல்லாம் ஆர்.எஸ்.எஸ் தான் இல்ல?”
(சற்று சமாளித்துக்கொண்டு) “இல்ல மக்களும் வாராங்க. அவங்கதான் ஆடுறாங்க. நான் என்ன சொல்றேன்னா வீட்டுல பிள்ளையார் வராதவரை யார் வந்தாலும் போலீசை பொருத்தவரை இயக்கம்தான். அதைத் தான் சொன்னேன்.”
இந்துத்துவ கும்பல அல்லாத சாதாரண மக்கள் யாரிடமாவது கருத்து கேட்கலாம் என்று ஒருவரை அணுகினோம்.
“என்ன சார் அந்த வழியா போக கூடாதுனு சொல்றாங்க.”
“ஆமாப்பா. கொஞ்ச வருசத்திற்கு முன்னாடி அந்த வழியா போகும்போது நம்மாளுக மசூதில செருப்ப எறிஞ்சிட்டாங்க, அது பிரச்சனையாயிருச்சி. அதுனால போக உடுறதுல்ல”
“நம்மாளுக தான் எறிஞ்சாங்களா?”
“ஆமா. யாரோ பண்ணிட்டாங்க.”
“பல வருசம் ஆச்சி இன்னும் போக உடமாட்டேன் சொல்றது எப்படி?”
“ஊர்வலத்துக்கு மட்டும்தான். முடிஞ்ச உடன ஒண்ணும் கிடையாது. அங்க போவாங்க இங்க வருவாங்க. பிரச்சனைலாம் ஒன்னும் இல்ல.”
உண்மைதான் சாதாரண மக்களுக்கு பிரச்சனை இல்லை. தொடர்ந்து பிரச்சனை இல்லாமல் அமைதி நிலவ வேண்டுமானால் மதவெறி ஆபாச குத்தாட்ட விநாயகர் ஊர்வலங்கள் தடைசெய்யப்பட வேண்டும். இந்துத்துவ இயக்கங்கள் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும்.
-    வினவு செய்தியாளர்கள்



உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment