கடையநல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் அமைக்க தமிழக அரசு திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம் இப்பகுதி மக்களின் 25 ஆண்டு காலக் கனவு நனவாகியுள்ளது.
கடையநல்லூரை தனி வட்டமாக அறிவிக்க வேண்டுமென, கடந்த 1989ஆம் ஆண்டுமுதல் பல்வேறு அமைப்புகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். அன்றைய சட்டப்பேரவை உறுப்பினர் கதிரவன் முதல் கடந்த முறை கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பீட்டர் அல்போன்ஸ் வரை இக்கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். ஆனால், ஒவ்வொரு பட்ஜெட் கூட்டத்தொடரிலும் தனி வட்டம்குறித்த அறிவிப்பு கானல் நீராகவே இருந்துவந்தது.
இந்நிலையில், நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் இத்தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட பூ.செந்தூர்பாண்டியன், தனது தேர்தல் வாக்குறுதியில் கடையநல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தார். அவர் தேர்தலில் வெற்றி பெற்று கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற (தற்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்) பின்னர் 7-9-2011இல் கடையநல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் அமைப்பது தொடர்பான கோரிக்கையை முன்வைத்தார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கடையநல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனிவட்டம் அமைப்பது தொடர்பான பரிந்துரையை அரசுக்கு அனுப்பியது. ஆனால், அதில் 25 வருவாய்க் கிராமங்களே இடம்பெற்றிருந்தன (30 கிராமங்கள் இடம் பெற வேண்டும்). இதனால் தனி வட்டம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், 13-6-2014இல் நடைபெற்ற உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் 30 வருவாய்க் கிராமங்களை உள்ளடக்கிய வகையில் புதிய பிரேரணை அனுப்புமாறு கூறப்பட்டதையடுத்து, புதிதாக கருத்துரு அனுப்பப்பட்டது.
இதையடுத்து, கடையநல்லூர் தொகுதி மக்களின் 25 ஆண்டு காலக் கனவான தனி வட்டத்தை அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா, சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டார்.
எந்தெந்தக் கிராமங்கள்?
புதிதாக உருவாகவுள்ள கடையநல்லூர் வட்டத்தில் சேர்க்கப்படவுள்ள கிராமங்கள்:
தென்காசி வட்டம் - கடையநல்லூர் குறுவட்டம்: போகநல்லூர், சொக்கம்பட்டி, கடையநல்லூர், கம்பனேரி புதுக்குடி பகுதி-1, கம்பனேரி புதுக்குடி பகுதி-2, கனகசபாபதிபேரி, காசிதர்மம், கிருஷ்ணாபுரம், வைரவன்குளம்.
தென்காசி வட்டம் - ஆய்க்குடி குறுவட்டம்: ஆய்க்குடி, இடைகால், கிளாங்காடு, கொடிக்குறிச்சி, நயினாரகரம், பொய்கை, சாம்பவர்வடகரை, ஊர்மேனியழகியான்.
சிவகிரி வட்டம் - புளியங்குடி குறுவட்டம்: புளியங்குடி, சிந்தாமணி, மலையடிக்குறிச்சி, மேலப்புளியங்குடி, நகரம், ராமசாமியாபுரம், ஆலங்குளம், தலைவன்கோட்டை, திருமலைநாயக்கன் புதுக்குடி.
செங்கோட்டை வட்டம் - இலத்தூர் குறுவட்டம்: அச்சன்புதூர்.
சங்கரன்கோவில் வட்டம் - வீரசிகாமணி குறுவட்டம்: புன்னைவனம், மடத்துப்பட்டி, அரியநாயகிபுரம்.
சங்கரன்கோவில் வட்டம்- சேர்ந்தமரம் குறுவட்டம்: சேர்ந்தமரம் (சேர்ந்தமங்கலம்).
புதிதாக உருவாக்கப்படவுள்ள கடையநல்லூர் தனி வட்டத்தில் 30 வருவாய்க் கிராமங்கள் இருக்கும். மேலும், புதிய வட்டம் 520.71 சதுர கிலோ மீட்டர் பரப்புடன் 3,14,690 மக்கள்தொகை உள்ளதாக அமையும என வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment