டெல்லி: ரம்ஜான் நோன்பு இருக்கும் இஸ்லாமிய ரயில்வே ஊழியர் வாயில் சப்பாத்தியை திணித்ததாக சிவசேனை எம்.பி அரவிந்த் சாவந்த் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத உணர்வுகளை அவர் புண்படுத்திவிட்டதாக கூறி எதிர்க்கட்சிகள் தர்ணா செய்ததால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி நிலவியது.

டெல்லியில் மராட்டிய பவன் செயல்பட்டு வருகிறது. இங்கு அம்மாநில எம்.பிக்களுக்கு சாப்பாடு சப்ளை செய்வது வழக்கம். இந்திய ரயில்வேயின் துணை அமைப்பான ஐஆர்சிடிசி சாப்பாடு சப்ளை செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று, சிவசேனை கட்சியை சேர்ந்த அரவிந்த் சாவந்த் உட்பட 11 எம்.பிக்கள் சாப்பிடுவதற்காக மராட்டிய பவன் சென்றனர்.

அங்கு பரிமாறப்பட்ட உணவில் மகாராஷ்டிர பாரம்பரிய உணவுகள் இல்லை என்று கூறப்படுகிறது. வட இந்திய உணவு வகைகள் இருந்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த அரவிந்த் சாவந்த் உள்ளிட்ட 11 எம்.பிக்களும் சமையலறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவர்களுடன் சில மீடியாக்காரர்களும் நுழைந்துள்ளனர்.

நீங்க சாப்பிடுவீங்களா இதை..

அங்கு கேட்டரிங் சூப்பர்வைசரான அர்ஷத்திடம் சென்ற அரவிந்த் சாவந்த், ஒரு சப்பாத்தியை பிய்த்து, 'இதை எங்களுக்கு அளித்துள்ளீர்களே, நீங்கள் சாப்பிடுவீர்களா' என்று வாய்க்குள் திணிக்க முற்பட்டார் அரவிந்த் சாவந்த். அப்போது அர்ஷத், அந்த எம்.பி கையை தட்டிவிட்டார். அருகில் இருந்த மற்ற ஊழியர்கள், அர்ஷத் ஒரு முஸ்லிம், அவர் ரம்ஜான் நோன்பு இருக்கிறார் என்று கூறியுள்ளனர். பிறகு எம்.பி மற்றும் அவருடன் வந்தவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இஸ்லாமியர் என தெரிந்திருந்தும்..

இந்நிலையில், மகாராஷ்டிரா பவனின், ரெசிடென்ட் கமிஷனருக்கு அர்ஷத் இந்த விவகாரத்தை புகாராக எழுதியுள்ளார். அந்த புகாரில் "எனது சீருடை சட்டையில் குத்தியுள்ள பேட்ஜில் அர்ஷத் என்ற பெயர் இருந்தது. இதை பார்த்தால் நான் இஸ்லாமியர் என்பது எம்.பி.க்கு தெரிந்திருக்கும். அப்படியிருந்தும், ரம்ஜான் நோன்பு இருக்கும் நேரத்தில் அதை முறிக்கும் வகையில் எனது வாயில் சப்பாத்தியை எம்.பி திணித்தது, மனவேதனையை உண்டாக்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

லோக்சபாவில் அமளி

இதையடுத்து, சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும், இதற்காக மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும், மகாராஷ்டிர பவன் ரெசிடென்ட் கமிஷனர் ஐஆர்சிடிசிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் ஒருவாரத்துக்கு முன்பு இந்த விவகாரம் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தெரியவந்ததும், லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை மதியத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

எம்.பி. விளக்கம்

இதனிடையே அரவிந்த் சாவந்த் கூறுகையில், "ஐஆர்சிடிசி அளித்த உணவு தரமில்லாமல் இருந்தது. எனவேதான், அதுகுறித்து தட்டிக்கேட்க சமையலறைக்கு சென்று சூப்ரவைசரிடம் சண்டை போட்டேன். மத உணர்வுகளை புண்படுத்துவது நோக்கம் கிடையாது" என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், சிவசேனை கட்சி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும், பாஜக இந்த விஷயத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment