ஆந்திர சட்டசபையில் 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஷோபா நாகிரெட்டி. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் நடைபெறும் தேர்தலில் அனந்தபுரம் மாவட்டம் ஆலகட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். கடந்த வாரம் பிரசார கூட்டத்தில் பங்கேற்று விட்டு திரும்பிய போது கார் விபத்தில் பலியானார்.
இதையடுத்து அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓட்டுப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர் பதிவு செய்யப்பட்டதால் தேர்தல் ரத்து செய்யப்படாது என அறிவிக்கப்பட்டது.

இது குறித்து மத்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தொகுதியில் யாருக்கு அதிகம் ஓட்டு கிடைக்கிறதோ அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். ஒருவேளை ஷோபா நாகிரெட்டி அதிக ஓட்டுகள் பெற்று இருந்தால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.
வேட்பாளர் மரணம் அடைந்த காரணத்தால் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

இதையடுத்து இறந்து போன ஷோபா நாகி ரெட்டி வெற்றிக்காக அவரது குடும்பத்தினர் தொகுதியில் ஓட்டு சேகரித்து வருகிறார்கள்.
ஷோபாவின் கணவரும், நத்தியாலா தொகுதி வேட்பாளருமான பூமா நாகிரெட்டி ஆதரவு திரட்டுகிறார். மேலும், ஷோபாவின் மகள் அகிலப்பிரியா, தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தாய் வெற்றிக்காக பிரசாரம் செய்து வருகிறார்.
அகிலப்பிரியா கூறும் போது, ‘‘எனது தாயை 5 முறை வெற்றி பெறச் செய்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்தீர்கள். இப்போது மீண்டும் வெற்றி பெறச் செய்யுங்கள். இறந்த பின்னரும் வெற்றி பெற்றார் என்ற பெருமையை எனது தாய்க்கு தேடிக் கொடுங்கள்’’ என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

கண்ணீருடன் வாக்கு சேகரிக்கும் அகிலப் பிரியாவை பெண்கள் ஆறுதலுடன் கன்னத்தை வருடி ‘‘நீ ஏனம்மான கவலைப் படுகிறாய்’’ எங்கள் ஓட்டு உனது அம்மாவுக்குத்தான் என்று கூறுவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment