கடையநல்லூர் அருகே உள்ள திருவேட்டநல்லூர் வடகாட்சியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று மாலை இங்கு பூக்குழி திருவிழா நடந்தது. இங்கு பாதுகாப்பு பணியில் கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சொக்கம்பட்டி சப்–இன்ஸ்பெக்டர் சிபிராஜ்மோகன் தலைமையிலான போலீசார் ஈடுபட்டனர். கோவில் திருவிழாவில் அதே பகுதியை சேர்ந்த திரவியம் மகன் சண்முகம் (வயது 20) என்பவர் குடிபோதையில் பக்தர்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.

இதை பார்த்த சப்–இன்ஸ்பெக்டர் சிபிராஜ்மோகன், சண்முகத்திடம் பக்தர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என கண்டித்தார். அப்போது அருகே நின்று கொண்டிருந்த சண்முகத்தின் உறவினர்கள் வெற்றிவேல்(வயது 27), அவரது தம்பி ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பேரும் சேர்ந்து சப்–இன்ஸ்பெக்டர் சிபிராஜ்மோகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இருவரும் சப்–இன்ஸ்பெக்டரை தள்ளிவிட்டு, இரும்பு கம்பியால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்த போலீசார் சப்–இன்ஸ்பெக்டரை பத்திரமாக மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசில் சப்–இன்ஸ்பெக்டர் சிபிராஜ்மோகன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெற்றிவேல், ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment