கடையநல்லூர் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. கருப்பாநதி மற்றும் தாமிரபரணி திட்டம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு 14 ஆயிரத்து 200 குழாய் இணைப்புகள் உள்ளன. அடிகுழாய் 450ம், தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி 90ம் மக்கள் பயன்பாட்டில் உள்ளது.
கருப்பாநதி அணையில் நீர்வற்றி, பெரியாறும் வறண்டு விட்டதால் தினமும் உற்பத்தியான 35 லட்சம் லிட்டர் குடிநீர் குறைந்து வெறும் 17 லட்சம் லிட்டர்தான் உற்பத்தியாகி வருகிறது. தாமிரபரணி குடிநீர் திட்டம்தான் கடையநல்லூர் நகரத்திற்கு கைகொடுத்து வருகிறது.
இதிலும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் கடையநல்லூர் நகருக்கு குடிநீர் வடிகால் வாரியம் கொடுக்கவேண்டும். ஆனால் 14 லட்சம் லிட்டர் தண்ணீர்தான் சராசரியாக கிடைக்கிறது. இதனை நகரில் 33 வார்டுகளுக்கும் பிரித்து விநியோகிக்க வேண்டிய கட்டாயத்தில் நகராட்சி நிர்வாகம் உள்ளது. இதிலும் பல கிலோமீட்டர் தொலைவிலிருந்து தாமிரபரணி தண்ணீர் வரும் பாதையில் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டாலும், மின்தடை ஏற்பட்டாலும், வெகுதூரம் சென்று சரிசெய்ய வேண்டிய நிலையும் உள்ளது.
மேலும் குடிநீர்த் திட்டத்திற்கென போதிய ஜெனரேட்டர் வசதியில்லாததாலும், குடிநீரேற்றம் செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் தொய்வுநிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் நகரில் ஒருநாள் விட்டு ஒருநாள் விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் செய்யப்பட்டு வருகிறது. மழை இல்லாததால் அடிபம்புகளிலும் தண்ணீர் இல்லை. பெரும்பாலான குழாய்களில் காற்றுதான் வருகிறது.
இதனால் பெண்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் வயல் வெளி கிணறுகளுக்கு தண்ணீர் தேடி அலைந்து திரிகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Post a Comment