கடையநல்லூர் அருகே உள்ள வேட்டரம்பட்டி கிராமத்தில் வாக்குச் சாவடியை மாற்றக்கோரி பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்கவும், வரும் 27ந்தேதி ரேசன் கார்டு மற்றும் வாக்காளர் அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிற்குட்பட்ட மடத்துபட்டி ஊராட்சி, வேட்டரம்பட்டி கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு 800க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். சுதந்திரமடைந்த காலம் முதல் தங்களது கிராமத்திலுள்ள வாக்குச் சாவடியிலேயே வாக்களித்து வந்தனர்.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 24ந்தேதி நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலையொட்டி இக்கிராம மக்கள் வாக்களிக்க எப்போதுமில்லாத வகையில் அருகிலுள்ள கீழத்திருவேட்ட நல்லூர் கிராமத்தில் வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் வாக்குச்சாவடியை ஏற்பாடு செய்துள்ளனர். ஏற்கனவே வேட்டரம்பட்டி மற்றும் கீழத்திருவேட்ட நல்லூர் பொது மக்களிடையே சுமூக உறவுகளில்லாமல் அவ்வப்போது மோதல்கள் வந்து இரு தரப்பினர் மீதும் சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

இந்நிலையில் புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாக்குச் சாவடியை மீண்டும் வேட்டரம்பட்டி கிராமத்திற்கு மாற்றம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தும், தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கண்டித்து தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து தட்டி போர்டுகளை பொதுமக்கள் வைத்துள்ளனர். மேலும் வரும் 27ந்தேதி சாலை மறியல் செய்யவும், தங்களுக்குரிய குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அட்டைகளைமாவட்ட வருவாய் நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளனர்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment