தென்காசி மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் மார்ச் 15, 16ஆம் தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.
 இதுகுறித்து கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலர் வீ. கருப்பசாமிபாண்டியன் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வேட்பாளராக சி. தேவதாசசுந்தரம் போட்டியிடுகிறார். மார்ச் 13ஆம் தேதி நெல்லை வரும் அவருக்கு திமுக, கூட்டணிக் கட்சி சார்பில் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படும். வேட்பாளரை ஆதரித்து கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின், மார்ச் 15ஆம் தேதி (சனிக்கிழமை) பிரசாரம் செய்கிறார். அன்று இரவில் பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
 தென்காசி தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளரான புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து 16ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.

 திருநெல்வேலி தொகுதியில் தாழையூத்தில் தொடங்கி இரவு பாளையங்கோட்டை பொதுக்கூட்டம் வரை சுமார் 200 கி.மீ. தொலைவு சென்று ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார் என்றார் அவர்.

 மண்ணின் மைந்தர்தான்: திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளர் தேவதாசசுந்தரம், ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்குட்பட்ட கடையம் ஒன்றியம் புங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். தொழில்ரீதியாக அவர் சென்னையில் இருந்தாலும் அவர் மண்ணின் மைந்தர்தான்.
 மக்களுக்காக உழைக்க வேண்டும். கட்சிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் தேவதாசசுந்தரத்தை தலைவர் கருணாநிதி தேர்வு செய்து அறிவித்துள்ளார். வேட்பாளர் உழைப்பால் உயர்ந்தவர். சொந்த நிதியில் இருந்து பிறருக்கு உதவி செய்பவர் என்று கருப்பசாமிபாண்டியன் குறிப்பிட்டார்.

கட்சியின் தணிக்கைக் குழு உறுப்பினர் சுப. சீதாராமன், மாவட்ட இளைஞரணி செயலர் எம்.எஸ்.எஸ். ஜார்ஜ்கோசல், மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் மு. ஆறுமுகம், மாநகர் மாவட்ட இளைஞரணிச் செயலர் எஸ்.வி. சுரேஷ், சங்கர்நகர் பேரூராட்சித் தலைவர் பேச்சிப்பாண்டியன் உடன் இருந்தனர்.

 ஸ்டாலின் பிரசாரம் செய்யும் இடங்கள்

 திருநெல்வேலி, மார்ச் 10: திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்யும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 மார்ச் 15ஆம் தேதி திருநெல்வேலி தொகுதி வேட்பாளரை ஆதரித்து மாலை 3 மணிக்கு தாழையூத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார். திருநெல்வேலி பேரவைத் தொகுதியில் தச்சநல்லூர், திருநெல்வேலி நகரம் காந்தி சதுக்கம், சீதபற்பநல்லூர், ஆலங்குளம் பேரவைத் தொகுதியில் மாறாந்தை, ஆலங்குளம், இடைகால், பொட்டல்புதூர், ஆழ்வார்குறிச்சி, கீழஆம்பூர், அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதியில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, நான்குனேரி பேரவைத் தொகுதியில் களக்காடு, மாவடி, திருக்குறுங்குடி, ஏர்வாடி, நான்குனேரி, ராதாபுரம் தொகுதியில் வள்ளியூர், பாளையங்கோட்டை பேரவைத் தொகுதியில் மேலப்பாளையம் ஆகிய இடங்களில் வேனில் இருந்தவாறு வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகிறார்.

 தென்காசி தொகுதியில்... மார்ச் 16ஆம் தேதி மாலை 3 மணிக்கு தென்காசி தொகுதிக்குட்பட்ட மேலகரத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து தென்காசி, குத்துக்கல்வலசை, கடையநல்லூர் பேரவைத் தொகுதியில் கொடிக்குறிச்சி, சிவராமபேட்டை, நயினாரகரம், இடைகால், கடையநல்லூர், சொக்கம்பட்டி, வாசுதேவநல்லூர் தொகுதியில் புளியங்குடி, முள்ளிகுளம், சங்கரன்கோவில் தொகுதியில் சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர் ஆகிய இடங்களில் வேனில் இருந்தவாறு பிரசாரம் செய்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment