கடையநல்லூர் மாவடிக்கால் மந்தை திடலில் இந்துமுன்னணி கொடியேற்றும் நிகழ்ச்சி கடந்த 31–ந்தேதி நடந்தது. இதில் இந்து முன்னணி மாநில கொள்கை பரப்பு செயலாளர் இளங்கவி அரசன் என்கிற ராஜேந்திரன் முஸ்லீம்களுக்கு எதிராகவும், மோதலை தூண்டும் விதமாகவும் பேசியதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட செயலாளர் பைசூல் புகார் மனு அளித்தார்.

அதன்பேரில் இளங்கவி அரசன் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். இந்நிலையில் கடையநல்லூரில் கடந்த 31–ந்தேதி நடந்த கொடியேற்று விழாவுக்கு தலைமை தாங்கிய இந்து முன்னணி மாவட்ட தலைவர் சிவாவை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கண்டிக்கும் விதமாக இன்று (6–ந்தேதி) புளியங்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவர் ஜெயகுமார் அறிவித்திருந்தார்.

இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் புளியங்குடியில் போராட்டம் நடத்துவதற்கு இந்து முன்னணியினருக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். திட்டமிட்டபடி புளியங்குடியில் போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று கணேசன் அறிவித்தார்.

ஆகவே இந்து முன்னணியினர் தடையை மீறி போராட்டம் நடத்தலாம் என்பதால் புளியங்குடி பஸ் நிலையம் முன்பு இன்று போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் புளியங்குடியில் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் ரோந்து வந்து கண்காணிக்கின்றனர்.

இந்நிலையில் கடையநல்லூர் போலீசார் தேடி வந்த இந்து முன்னணி மாநில கொள்கை பரப்பு செயலாளர் இளங்கவி அரசன் என்கிற ராஜேந்திரனை தனிப்படை போலீசார் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வைத்து கைது செய்தனர். நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த அவரை இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான தனிப்படை போலீசார் மடக்கினர். அவர் தென்காசி கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment