நரேந்திர மோடி சனிக்கிழமை சென்னை வருவதையொட்டி அவர் செல்லும் வழிகளிலும், அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை, வண்டலூர் பகுதிகளில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம் சனிக்கிழமை மாலை வண்டலூர் விஜிபி மைதானத்தில் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள மாலை 6 மணிக்கு மோடி தனி விமானத்தில் வருகிறார்.
அவரது விமானம் இறங்கவுள்ள பழைய விமான நிலையம், வண்டலூர் பொதுக்கூட்ட மேடை, இரவு தங்கவுள்ள சோழா ஓட்டல், மறுநாள் அவர் விழாவில் பங்கேற்க உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் ஆகிய 4 இடங்களும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கடந்த அக்டோபர் மாதம் மத்தியப் பிரதேசத்தில் இருந்து தப்பிய 6 தீவிரவாதிகள் மற்றும் சிமி தீவிரவாதிகள் இருவரின் புகைப்படங்களை குஜராத் போலீஸார் தமிழக போலீஸாருக்கு அனுப்பி உள்ளனர். அந்த புகைப்படங்களை வைத்துக் கொண்டு தமிழக போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குஜராத் ஐ.ஜி. ராதாகிருஷ்ணன் தலைமையில் குஜராத் போலீஸார் சென்னை வந்துள்ளனர். மோடியை சுற்றி குஜராத் போலீஸாரே முதல் பாதுகாப்பு அரணாக இருப்பார்கள். பொதுக்கூட்ட மேடையை ஹெலிகாப்டர் மூலமும் தமிழக காவல் துறையினர் கண்காணிக்கிறார்கள்.
நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு சென்னை, வண்டலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரவாயல் வழியாக ஜி.எஸ்.டி. சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மதுரவாயலில் தடை செய்யப்படும். இந்த வாகனங்கள் படப்பை, வாலாஜாபாத், பெரும்புதூர் வழியாக ஜி.எஸ்.டி. சாலைக்கு செல்ல வேண்டும்.
ஜி.எஸ்.டி. சாலை வழியாக ஊரப்பாக்கம் மற்றும் சிங்கபெருமாள் கோயில் நோக்கி செல்லும் வாகனங்கள் பெருங்களத்தூர் வழியாக திருப்பி விடப்படும்.
செங்கல்பட்டு நோக்கி செல்லும் பேருந்துகள் கொளப்பாக்கம், கேளம்பாக்கம், திருப்போரூர் வழியாக செல்ல வேண்டும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment