நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் கருணாகரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார்.
கடையநல்லூர் அருகே உள்ள பாலஅருணாசலபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50–க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்தினருடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். கையில் மண்எண்ணை கேனை கொண்டு வந்திருந்த அவர்கள் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்ததும் 10 பேர் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதனை பார்த்த போலீசார் விரைந்து சென்று 10 பேரிடமிருந்த மண்எண்ணை கேனையும்,மேலும் 40 பேர் வைத்திருந்த மண்எண்ணை பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. தரையில் அமர்ந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அவர்களுடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:–
நாங்கள் பாலஅருணாசலபுரம் பகுதியில் பரம்பரை பரம்பரையாக கல் உடைக்கும் தொழில் செய்து வருகிறோம். அங்குள்ள கல்குவாரியை அரசு குத்தகைக்கு விடாமல் மூடி வைத்துள்ளது. இதனால் நாங்கள் வருமானமின்றி தவிக்கிறோம்.
எனவே கல்குவாரியை உடனடியாக கூட்டுறவு சங்கத்திற்கு குத்தகைக்கு விட வேண்டும்.தனி நபர் யாருக்கும் குத்தகைக்கு வழங்க கூடாது. இது குறித்து பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் தீக்குளிக்க
முயன்றோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் 45 பேரையும் கைது செய்தனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Post a Comment