சென்னை: சென்னையைச் சேர்ந்த பிரபலமான பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜே.ஏ.கே. தரீன் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.

பத்மஸ்ரீ விருது பெற்றவர் தரீன். இவர் சென்னை வண்டலூரில் உள்ள கிரசென்ட் பொறியியல் கல்லூரியை உள்ளடக்கிய பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கிறார்.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியைப் பலப்படுத்தும் வகையில் அதில் இணைவதாக அறிவித்துள்ளார். தனது கல்வி சார்ந்த அறிவை ஆம் ஆத்மிக்காக செலவிடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
4 ஆண்டு கால கல்வித்துறை அனுபவம் கொண்டவர் தரீன். தான் ஆம் ஆத்மியில் இணைந்தது குறித்து தரீன் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பா்டுகள், கொள்கைகளால் நான் விரக்தி அடைந்திருந்தேன். அனைத்து மக்களையும் உள்ளடக்கிய செயல்பாடாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பாடுகள் இல்லை.

ஆனால் கொள்கை முடிவெடுப்பதில் புதிய அலை பரப்புகிறது ஆம் ஆத்மி. மக்களை உள்ளடக்கி அவர்கள் செயல்படுகிறார்கள். புதிய மாற்றத்துக்கான நல்லதொரு தொடக்கமாக ஆம் ஆத்மியைப் பார்க்கிறேன். எனவேதான் அக்கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு செய்து இணைந்துள்ளேன் என்றார்.

தரீன் முன்பு பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினராக இருந்தவர். அதேபோல தெற்காசிய பவுண்டேஷனின் தலைமை செயலதிகாரியாகவும் இருந்துள்ளார். ஆம் ஆத்மி சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிடவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார் தரீன்.

ஆம் ஆத்மி கட்சியில் பல்துறைப் பிரபலங்களும் அலை அலையாக இணைந்து வருகின்றனர். இந்த வாரத்தில்தான் இன்போசிஸ் முக்கிய நிர்வாகியான பாலகிருஷ்ணன் இணைந்தார். அதேபோல ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்தின் இந்தியப் பிரிவு தலைவர் மீரா சன்யால் இணைந்தார் என்பது நினைவிருக்கலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment