ஒடாகா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், 36 பந்தில் சதம் அடித்த கோரி ஆண்டர்சன் உலக சாதனை படைத்தார். நியூசிலாந்து அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. இரண்டாவது போட்டி மழையால் ரத்தானது. இரு அணிகள் மோதும் மூன்றாவது போட்டி குயிண்ஸ்டவுனில் நடக்கிறது. மழை குறுக்கிட்ட காரணத்தினால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து போட்டி 21 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டுவைன் பிராவோ, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணிக்கு கப்டில் (1) ஏமாற்றினார். தொடர்ந்து வந்த கேப்டன் மெக்கலம் (33) நிலைக்கவில்லை. டெய்லர் (9) தாக்குபிடிக்கவில்லை. பின் ரைடருடன் இணைந்த கோரி ஆண்டர்சன் புயல் வேகத்தில் ரன்கள் சேர்த்தார். இவர் 36 பந்தில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார். இதற்குமுன் கடந்த 1996ல் பாகிஸ்தான் வீரர் அப்ரிதி 37 பந்தில் சதம் அடித்தே உலக சாதனையாக இருந்தது.
எதிர்முனையில் இவருக்கு நல்ல கம்பெனி கொடுத்த ரைடர், 45 பந்தில் சதம் அடித்தார். இவர் 104 ரன்கள் எடுத்த போது ஹோல்டர் பந்தில் அவுட்டானார். கோரி ஆண்டர்சன் தொடர்ந்து ரன் வேட்டை நடத்த 21 ஓவர் முடிவில், நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 283 ரன்கள் குவித்தது. ஆண்டர்சன் (131), ராஞ்சி (3) அவுட்டாகாமல் இருந்தனர்.
கடின இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சார்லஸ் ‘டக்’ அவுட்டானார். சிம்மன்ஸ் (13), வால்டன் (17) நிலைக்கவில்லை. பாவெல் (1), தியோநரைன் (29) ஏமாற்றினர். கேப்டன் டுவைன் பிராவோ மட்டும் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார். 21 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுக்கு 124 ரன்கள் மட்டும் எடுத்து 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 1–1 என தொடரை சமன் செய்ததது.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment