முஸஃபர்நகர்: முஸஃபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள நிவாரண முகாம்களை நான்கு நாட்களுக்குள் இழுத்து மூட நேற்று உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் துவங்கிவிட்டன.
கடுமையான குளிரால் குழந்தைகள் மரணித்துக் கொண்டிருக்கும்போது இரக்க உணர்வே இல்லாமல் உ.பி. மாநில சமாஜ்வாதிக் கட்சி அரசு இந்த எதேச்சதிகார நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
முகாம்கள் மூடப்படுவதால் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் கடைசிப் புகலிடமும் இல்லாமல் போகும். முகாம்களை மூடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து தங்களது வீடுகளுக்குச் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
மிக அதிகமான அகதிகள் தங்கியுள்ள லோஇ முகாமில் திங்கள்கிழமை 150 கூடாரங்கள் நீக்கம் செய்யப்பட்டன. எக்ஸ்கவேட்டரின் உதவியுடன் போலீஸ் கூடாரங்களைப் பிய்த்து எறிந்தது.
அருகில் உள்ள பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க முடியாத வகையில் நிலத்தைத் தோண்டி சேதப்படுத்தியது. முஸஃபர் நகரில் மிகப் பெரிய முகாமான மலிக்புராவில் தங்கியிருக்கும் மக்களிடமும் அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தவ்லி முகாமில் தங்கியிருந்த 60 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இங்குள்ள மதரஸாவில் தங்கியிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களிடமும் வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
லோஇ முகாமில் தங்கியிருந்த 420 பேர் இன்னொரு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டனர். இம்முகாமில் தங்கியிருக்கும் இதர நபர்களையும் வெளியேற்றுவோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முகாம்களில் உள்ளவர்களை வீடுகளுக்குத் திரும்ப அழைத்துச் செல்ல நேற்று காலை 6 ட்ரக்குகள் வரவழைக்கப்பட்டன.
ஆனால், திரும்பிச் செல்ல வீடு இல்லை என்றும் அச்சம் காரணமாக சொந்த ஊருக்குத் திரும்ப முடியாது என்றும் 80 குடும்பங்கள் மறுத்துவிட்டன. லோஇ மற்றும் ஷாம்ளியில் உள்ள நான்கு முகாம்களை உ.பி. சுகாதாரத் துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
முகாம்களில் உள்ள மின்சார வசதி குறித்து ஆய்வு செய்தனர். சனிக்கிழமை முதல் துவங்கிய கட்டாய வெளியேற்றம், திங்கள்கிழமை தீவிரமடைந்தது. இவ்வாரத்திற்குள் முகாம்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேவேளையில் யாரையும் முகாம்களில் இருந்து பலம் பிரயோகித்து வெளியேற்ற மாட்டோம் என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறுகிறார். அகதிகளை அவர்களின் சம்மதத்துடன் வீடுகளுக்குத் திரும்ப அழைத்துச் செல்லும் பணியை மட்டுமே செய்வதாகவும் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலத்தில் கடுமையான குளிர் நிலவுகிறது.
தலைநகரான லக்னோ மற்றும் முஸஃபர் நகரில் 2 டிகிரி செல்சியசுக்கும் கீழ் கால நிலை நிலவுகிறது. முஸஃபர் நகரில் முகாம்கள் அமைந்துள்ள இடங்களில் 0.3 டிகிரி செல்சியஸுக்கும் கீழே காலநிலை சென்றுள்ளது.
கடுமையான குளிர் மூலம் முகாம்களில் 12 வயதுக்கும் கீழான 34 குழந்தைகள் மரணமடைந்ததாக உ.பி. அரசு நியமித்த உயர்மட்டக் குழு கண்டறிந்தது. குழந்தைகளின் மரணம் தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசு உ.பி. அரசுக்குக் கடிதம் அனுப்பியிருந்தது.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment