கடையநல்லூர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் ஸ்ரீஅபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற அனுமன் ஜயந்தியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இக்கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் அனுமன் ஜயந்திமகோத்ஸவம் தொடங்கியது.தொடர்ந்து லட்சார்ச்சனை, சுந்தரகாண்டம் பாராயணம், புருஷசுக்த ஜபம்,சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை, வால்மீகி ராமாயண பாராயணம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை 6 முதல் புதன்கிழமை காலை 6 வரை "அகண்டராம நாம ஜபம்" நடைபெற்றது. இரவு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான அனுமன் ஜயந்தி புதன்கிழமை காலை நடைபெற்றது.இதையொட்டி வெள்ளி அங்கியுடன் பல்வகைக் கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ராதாகிருஷ்ணன்,அறங்காவலர்கள் சுப்பிரமணியன், சங்கரசுப்பிரமணியன், மீனாபட்டாச்சாரியா,சிவகுமார், செயல் அலுவலர் சிவராமபிரபு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
பக்தர்கள் சிரமம்:
பக்தர்கள் ஒரே வழியில் சென்று சுவாமி தரிசனம் முடித்து விட்டு அதேவழியில் திரும்ப வேண்டியதிருந்ததால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீஸாரும் அப்பகுதியில் இல்லாததால் பக்தர்கள் பெரிதும் அவதியுற்றனர்.




உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment