கடையநல்லூர், டிச. 29–
காங்கிரஸ், பாரதீய ஜனதா இல்லாத கூட்டணியை உருவாக்க தி.மு.க. தலைவர் கருணாநிதி வியூகம் வகுத்து வருகிறார் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். தி.மு.க. பொதுக்குழு தீர்மான விளக்கம் மற்றும் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கடையநல்லூரில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–

தி.மு.க. ஆட்சி காலத்தில் நிலவி வந்த சில மணி நேர மின்வெட்டை முற்றிலுமாக நீக்கி மின்மிகை மாநிலமாக உருவாக்குவோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் ஆட்சியை பிடித்த அ.தி.மு.க. இன்று வரை அதை நிறைவேற்றவில்லை. மாறாக, இப்போதைய மின் வெட்டுக்கு மத்திய அரசும், கருணாநிதியும் தான் காரணம் என ஜெயலலிதா கூறி வருகிறார்.

தி.மு.க. ஆட்சியில் ரூ.26,624 கோடி மதிப்பீட்டில் 7,798 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதற்கான பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இத்திட்டங்களை முறையாக அ.தி.மு.க. அரசு செயல் படுத்தினாலே மின்வெட்டு சரி செய்யப்பட்டிருக்கும். ஆனால் தி.மு.க.வுக்கு நல்ல பெயர் வரக்கூடாது என்பதற்காக அத்திட்டங்களை எல்லாம் அ.தி.மு.க. முடக்கியதால் தான் மின் வெட்டினை சரி செய்ய முடியவில்லை.

அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் 2012–க்குள், தமிழகத்தில் உள்ள 151 நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிலிருந்து வெளியாகும் கழிவுகளை கொண்டு 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்று வரை ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவில்லை.
அ.தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.

வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா, காங்கிரஸ் இல்லாத மக்கள் விரும்பும் கூட்டணியை கருணாநிதி ஏற்படுத்தி வருகிறார். அந்த கூட்டணி நிச்சயம் வெற்றி கூட்டணியாக அமையும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment