கடையநல்லூர், டிச.17–

கடையநல்லூர் மதினா நகரை சேர்ந்த பீர்முகமது என்பவரின் மகன் முகமது அப்சல் (வயது19). இவரது நண்பர்கள் அஸ்லம், அஜீஸ். இவர்கள் 3பேரும் பாலிடெக்னிக் மாணவர்கள். ஒரே பாலிடெக்னிக்கில் படித்து வந்தனர். அவர்கள், தங்களுடன் படிக்கும் சங்கரன்கோவிலை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் புத்தகம் கொடுக்க மோட்டார் சைக்கிளில் நேற்றுஇரவு சென்றனர்.

பின்பு அவர்கள் 3பேரும் கடையநல்லூர் ரெயில்நிலையத்திற்கு வந்து நின்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு மாவடிக்கால் மந்தை பகுதியை சேர்ந்த ராமையா என்பவரின் மகன் அருண், வேலு என்பவரின் மகன் கருப்பசாமி உள்பட 7பேர் இருந்தனர். அவர்கள் முகமதுஅப்சல் உள்ளிட்ட 3பேரிடமும், ‘எதற்கு இரவு நேரத்தில் இங்கு நிற்கிறீர்கள்? என்று கேட்டுள்ளனர்.

இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அப்போது அருண், கருப்பசாமி உள்ளிட்டோர் முகமது அப்சல் உள்பட 3பேரையும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர்கள் அங்கிருந்து தப்பிஓடி, தங்களது பகுதிக்கு சென்று, அங்கிருந்தவர்களிடம் நடந்தவற்றை கூறினர்.

இதையடுத்து முகமது அப்சலின் உறவினரான சதாம் என்பவர், சிலருடன் மாவடிக்கால் மந்தை பகுதிக்கு சென்றார். அப்போது அவர்களையும், அருண் உள்ளிட்டோர் தாக்கியதாக தெரிகிறது. இதில் சதாமுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

இதனையறிந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சுமார் 100பேர் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தை இரவில் முற்றுகையிட்டனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே சம்பவ இடத்திற்கு புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வானமாமலை தலைமையிலான போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு போலீசார் உறுதி அளித்தனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருந்தபோதிலும் கடையநல்லூரில் பரபரப்பான சூழல் நிலவியது. இதனால் அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் அருண், கருப்பசாமி ஆகிய 2பேரையும் போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடிவருகின்றனர்.

அவர்கள் மீது கொலைமுயற்சி, தாக்குதலில் ஈடுபடுதல், காயம் ஏற்படுத்துதல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment