கடையநல்லூர், நவ.3–
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த வேலு மகன் அய்யனார். ஆனந்தன் மகன் பிச்சுமணி(வயது22). இவர்கள் இருவரும் கேரளாவில் ஒரே இடத்தில் கட்டிட வேலை பார்த்து வந்தனர். அதில் அவர்களுக்கிடையே நட்பு ஏற்பட்டது.

வேலை பார்க்கும் இடத்திலும், ஊருக்கு வந்த இடத்திலும் ஒன்றாகவே சேர்ந்து செல்வார்கள். அந்த அளவுக்கு இணைபிரியாத நண்பர்களாக இருந்தனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தனர். அப்போது தீபாவளிக்கு முந்தைய நாள் செங்கோட்டையில் உள்ள அய்யனாரின் பாட்டி திடீரென இறந்துவிட்டார்.

இதையடுத்து அய்யனார் தனது குடும்பத்தினருடன் செங்கோட்டைக்கு புறப்பட்டு சென்றார். அவர்களை பிச்சுமணியே வழியனுப்பி வைத்தார். அதன்பிறகு அய்யனாரின் வீட்டிற்கு பிச்சுமணி வந்தார். பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை திருட முயன்றார். ஆனால் பீரோசாவி எங்கு இருக்கிறது? என்று கண்டுபிடிக்க முடிய வில்லை.

ஆகையால் பீரோ தயாரிக்கும் ஒரு பட்டறைக்கு சென்று தனது வீட்டில் உள்ள பீரோ சாவி தொலைந்து விட்டது என்று கூறி, அங்கிருந்து ஒரு சாவியை வாங்கிச்சென்றார். ஆனால் அந்த சாவியால் பீரோவை திறக்க முடியவில்லை. இதையடுத்து பிச்சுமணி பீரோவை உடைத்து அதிலிருந்த 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ3 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிச்சென்றுவிட்டார்.
இந்நிலையில் செங்கோட்டைக்கு சென்றிருந்த அய்யனார் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அவர்கள் தங்களது வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு நகை–பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மற்றும் சிலரிடம் விசாரித்தனர்.

அப்போது பீரோ சாவி தொலைந்துவிட்டதாக பிச்சுமணி பட்டறைக்கு சென்ற தகவல் தெரியவந்தது. இதனையடுத்து அவரை பிடித்து விசாரித்தபோது, நகை–பணத்தை திருடியதையும், திருடிய நகைகளை புளியங்குடியில் அடகு வைத்து அதில் கிடைத்த பணத்தை ஜாலியாக செலவு செய்ததையும் ஒப்புக்கொண்டார்.
நண்பனே தனது வீட்டில் திருடியதை நினைத்த அய்யனார் அதிர்ச்சி அடைந்தார். அவர் நகை–பணம் திருடப்பட்டது குறித்து கடைய நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிந்து பிச்சுமணியை கைது செய்தார்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment