கடையநல்லூர் நகராட்சியில் போதுமான துப்புரவுப் பணியாளர்கள் இல்லாத காரணத்தால் நகராட்சியின் பொது சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
கடையநல்லூர் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 2011 ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 90,344. மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 28,560. தற்போது, கடையநல்லூர் நகராட்சியின் மக்கள் தொகை லட்சத்தை எட்டி வருகிறது.
அரசாணையில் கூறப்பட்டுள்ள அளவுகோலின் படி 28,560 குடியிருப்புக்களுக்கு 373 துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், கடையநல்லூர் நகராட்சியில் 84 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அதுபோல், உரக்கிடங்குக்கு தேவையான துப்புரவு பணியிடங்கள் 4 ஆகும். ஆனால், இருப்பதோ 2 பணியிடங்கள்தான். நாள்தோறும் 20 மெட்ரிக் டன் குப்பை சேரும் இடம் என்பதால் 4 பணியாளர்கள் இங்கு தேவை என்ற நிலையில் 2 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
மேலும், பேருந்து நிலையத்தைச் சுத்தம் செய்ய 2 பணியாளர்கள் தேவை. ஆனால், இருப்பதோ ஒரு பணியாளர் மட்டும்தான். ரூ. 10 லட்சம் வரை வருமானம் வரக்கூடிய நகராட்சியில் கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய 2 பேர் தேவை என்ற நிலையில் ஒருவர்தான் இப்பணியைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதிலும், சில துப்புரவு பணியாளர்கள் அலுவலகப் பணிக்காக ஒதுக்கப்படும் நிலையும் உள்ளது.
இதன் காரணமாக, நகராட்சியில் பல பகுதிகள் சுத்தம் செய்யப்படாமல் சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகிறது. நகர்மன்றத்தின் மூலம் அரசுக்கு ஏற்கெனவே கோரிக்கைகள் அனுப்பப்பட்ட நிலையிலும், இதுவரை கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படாததால் பெரும் பணிச்சுமையுடன் துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையுள்ளது.
இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் சைபுன்னிஷா சேகனா கூறியது: கடையநல்லூர் நகராட்சி விரிவடைந்து வரும் நிலையில், ஏற்கெனவே உள்ள துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது கடினமாக உள்ளது. மேலும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுக்கவும் துப்புரவுப் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். எனவே, புதிதாக 50 துப்புரவு பணியாளர்கள் பணியிடமும், 2 துப்புரவு ஆய்வாளர்கள் பணியிடமும், 3 துப்புரவு பணி மேற்பார்வையாளர் பணியிடத்தையும் தோற்றுவிக்க வேண்டும் என வலியுறுத்தி நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
எனவே, கடையநல்லூர் நகராட்சியில் நிலவும் சுகாதார சீர்கேட்டினை தவிர்க்க போதுமான எண்ணிக்கையில் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment