செங்கோட்டையை அடுத்த அச்சன்புதூர் அருகே உள்ள நெடுவயல் கிராமத்தில் உத்தமிஅம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் தைமாதம் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கோவிலின் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த வேலு என்பவர் இருந்து வருகிறார். சம்பவத்தன்று வேலு வழக்கம்போல பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.
நள்ளிரவில் மர்மகும்பல் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியலை உடைத்து அதிலிருந்த நகை– பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிவிட்டனர். மறுநாள் காலையில் கோவிலுக்கு வந்த பூசாரி உண்டியல் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் கோவில் பொருளாளர் இசக்கிதுரைக்கு தகவல் கொடுத்தார். இசக்கிதுரை அளித்த புகாரின் பேரில் அச்சன்புதூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கைரேகை நிபுணர்களும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர். கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பும் இக்கோவிலில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இரண்டாவது முறையாக இக்கோவிலில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment