நியூயார்க்: இந்தியாவில் செயல்படும், ஆர்எஸ்எஸ் அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி சீக்கிய அமைப்பு ஒன்று அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

சீக்கியர்களுக்கான நீதி (எஸ்எப்ஜே) என்ற அமைப்பு நியூயார்க் தெற்கு மாவட்ட கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், இந்தியாவில் செயல்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பை, வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு, சீக்கியர்களின் பொற்கோயிலுக்குள் ராணுவ நடவடிக்கை எடுக்க தூண்டியது, 2008ல் சர்ச்சுகளை எரிந்து, கன்னியாஸ்திரிகளை மானபங்கம் செய்தது, 2002ல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரம் போன்றவற்றில் ஆர்எஸ்எஸ்சுக்கு தொடர்புள்ளதாக அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

மேலும், தாய்மதத்திற்கு திரும்புமாறு முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை மதமாற்றமும் செய்து வருகிறது ஆர்எஸ்எஸ் என்றும் அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே, ஆர்எஸ்எஸ் அமைப்பை, வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவிக்க வேண்டும் என்று அந்த மனு கோரிக்கைவிடுத்துள்ளது. 

இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இந்த விஷயத்தில், இன்னும் 60 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது.

 பொற்கோவில் தாக்குதலில் சோனியாகாந்திக்கு தொடர்புள்ளதாக கூறி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் இதே, சீக்கியர்களுக்கான நீதி அமைப்புதான் என்பது நினைவிருக்கலாம்.

Read more at: http://tamil.oneindia.com/news/international/petition-filed-us-court-designate-rss-as-terror-group-219433.html


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment