நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படித்து வரும் 4 மாணவிகளிடம் நேற்று 5 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஆபாசமாக பேசியுள்ளனர்.
மேலும் செல்போனில் ஒரு மாணவியுடன் இருப்பது போல் படம் எடுத்து அதை காட்டி மிரட்டியுள்ளனர். பயந்து போன அந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் தங்களது வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் வாலிபர்கள் மிரட்டியது குறித்து கூறினர்.
இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் சம்பந்தப்பட்ட வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அம்பை டி.எஸ்.பி. மணிமாறன் விரைந்து வந்து பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
தொடர்ந்து இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவிகளை மிரட்டியது பொட்டல் புதூர் அருகே உள்ள திருமலையப்பபுரம் பஜனை மடத்தெருவை சேர்ந்த பக்கீர் மைதீன் மகன் முகமது ஜெய்லுதீன் ஆசாத் (19), அதே பகுதியை சேர்ந்த கணேசன், சுடலை மாரி, தங்கமாரி மற்றும் பொட்டல் புதூரை சேர்ந்த செல்லப்பா மகன் கிருஷ்ணசாமி (19) என்பது தெரியவந்தது.
இதில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவரான முகமது ஜெய்லுதீன் ஆசாத், கிருஷ்ணசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்ற 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை பொட்டல் புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு சில மாணவிகள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்து வந்த 2 வாலிபர்கள் நடந்து சென்ற 2 மாணவிகளை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
கை, கால்களில் லேசான கத்திகுத்து பட்ட அவர்கள் அலறினர். மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ–மாணவிகள் விரைந்து வந்து காயம் பட்ட மாணவிகளுக்கு முதலுவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் அவர்கள் அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவிகள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் மற்றும் ஏராளமான கிராம மக்கள் பள்ளி முன்புள்ள கடையம்–பொட்டல்புதூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் மாணவிகளை கத்தியால் குத்திய கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி. மணிமாறன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கத்திக்குத்து சம்பவம் குறித்து முதல் கட்ட விசாரணையில் ஏற்கனவே கைதான முகமது ஜெய்லுதீன் ஆசாத்தின் நண்பர்கள் 2 பேர் நேற்று மாணவிகளை கேலி–கிண்டல் செய்தது தொடர்பாக போலீசில் புகார் அளித்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் மாணவிகளை இன்று காலை கத்தியால் குத்தியது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் மாணவிகளை தாக்கிய வாலிபர்கள் யார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி முன்பும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment