விடுதலைத் திருநாளில் (15.08.2014) தமிழகத்தின் தலைநகர் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையில் மூவண்ண இந்திய கொடியை ஏற்றி வைத்து,
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஆற்றிய உரையை தொலைக்காட்சி வழியாக கோவையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தனது உரையில் இந்திய விடுதலைக்காக பாடுபட்டு அருந்தியாகங்கள் புரிந்த பல விடுதலைப் போராட்ட மாவீரர்களை நினைவு கூர்ந்தார். பாராட்ட வேண்டிய செயல் தான். ஆனால் இவர்களில் இந்திய விடுதலைக்காக வெள்ளைக்கார ஆக்கிரமிப்பாளர்களை விரட்ட முடியும் என்று துணிச்சலை முதன்முதலாக வெளிப்படுத்தி தமது இன்னுயிரையும் நீத்த ஒரு முஸ்லிம் விடுதலைப் போராட்ட வீரரையும் கூட தமிழக முதலமைச்சர் தனது உரையில் நினைவுக் கொள்ளவில்லை என்பது எனக்கு மிகுந்த வேதனையை தந்தது.
அவரது தற்போதைய ஆட்சியில் சென்ற ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் வீர மங்கை வேலு நாச்சியாருக்கு சிவகெங்கையில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தப் போது நான் நான் அந்த வீரமங்கைக்கு புகலிடம் கொடுத்து ஆயுதங்கள் கொடுத்து படை வீரர்களை கொடுத்த மாவீரர்கள் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானுக்கு திண்டுக்கல்லில் அவர்கள் நினைவாக நூலகம் அமைக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நான் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை ஏற்று திண்டுக்கல்லில் முன்னோடி விடுதலைப் போராட்ட வீரர்கள் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் நினைவு அரங்கம் கட்டப்படும் என்று அறிவித்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் குறைந்த பட்சம் மாவீரர்கள் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானை கூட தனது உரையில் நினைவுக் கொள்ளவில்லை.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் விடுதலைப் போர் தமிழக மண்ணில் வேலூர் கோட்டையில் 1806ல் நடைபெற்றது. அதில் முன்னணி பங்கு வகித்த முஸ்லிம் தளபதிகளை கூட தமிழக முதலமைச்சர் நினைவு கூரவில்லை.
வெள்ளைக்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி அவர்களை குலை நடுங்க வைத்த மாவீரன் மருதநாயகம் என்ற முஹம்மது யூசுப் கான் ஆங்கிலேயர்களால் படுகொலைச் செய்யப்பட்டு அவர் இறந்த பிறகும் மீண்டும் உயிர் பெற்று எழுந்துவிடுவாரோ என்ற அச்சத்தில் அவரது உடலின் பாகங்கள் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் தனித் தனியாக அடக்கம் செய்யப்பட்டது. மருதநாயகம் மரணித்த 250வது ஆண்டு இது. அவரையும் முதலமைச்சர் நினைவுக் கொண்டிருக்க வேண்டும். இப்படியே பட்டியல் நீள்கிறது. எதிர்காலத்திலாவது தமிழக முதலமைச்சர் தனது உரைகளில் விடுதலைப் போராட்டத்தின் இந்த முன்னோடிகளை நினைவு கூர வேண்டும்.
இங்கே தமிழக முதலமைச்சருக்காக சில மேற்கொள்கள்:
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் ரங்கூன் யார்க் சாலையில் உள்ள பகதுர்ஷாவின் சமாதியில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து தமக்கு மக்கள் அன்புடன் அளித்த தங்க வாளின் பிடியில் அடைத்து அவ்வாளினை ஓங்கிப் பிடித்தவராக நம்வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும் இம்மஹானிடம் இருந்தது போல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் வாள் மிகக் கூர்மையாக இருப்பதுடன், ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும்! – என்று சபதமேற்றார்.
- (ஆதாரம் தினமணி சுதந்திர பொன்விழா மலர் பக்கம். 69.)
You give me blood and I will give you Freedom என்று நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தேசவிடுதலைக்காக ரத்தம் சிந்த அழைப்பு விடுத்தபோது அவரது இந்திய தேசிய ராணுவத்தில் (Indian National Army) நூற்றுக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்தனர். பர்மா, மலேசியா, சிங்கப்பூரில் வியாபாரங்களிலும் தொழில்களிலும் ஈடுபட்டிருந்த பல இளைஞர்கள் அவரது ராணுவத்தில் இணைவதில் முந்திக்கொண்டனர். நேதாஜி 1943 ஜுலை 2 இல் சிங்கப்பூரில் ஆரம்பித்த ஆசாத் ஹிந்த் சர்க்கார் என்ற தற்காலிக சுதந்திர இந்திய அரசாங்கத்தின் மந்திரி சபையில் ராணுவ பிரதிநிதிகளாக லெப் கர்னல்ஸ் அஸீஸ் அஹமது, எம்.இஸட்கியானி, இஷான் காதிர், ஷாநாஸ்கான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். மேலும் (தமிழகத்தைச் சேர்ந்த இளையாங்குடியை அடுத்துள்ள கோதுக்குடியைச் சேர்ந்த) கரீம்கனி, டி.எம்.கான், ஹபிபுர்ரஹ்மான் ஆகியோரும் லெப்.கர்னல்ஸ் ஆகப் பணியாற்றியுள்ளனர்.
(ஆதாரம் கே. அருணாசலம், ஜெய்ஹிந்த், பககம்67 மேற்படி அணிந்துரையில் INA லெப்.கர்னல்.லட்சுமி மேற்படி பக்கம் 91)
1943 ஜுலை 2 – ஆம் தேதி சிங்கப்பூரில் இந்திய தேசிய தற்காலிக சுதந்திர அரசை நிறுவிய நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவ்வரசின் நிர்வாக செலவிற்காக ரிஸர்வ் பேங்க் ஒன்றை நிறுவினார். அவ்வங்கிக்கான நிதியை சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற கீழை நாடுகளில் திரட்டினார். அவ்வாறு நிதி திரட்டும் கூட்டம் ஒன்றை பர்மாவின் தலைநகரான இரங்கூனில் கூட்டினார்.
வருகை தந்த வியாபாரப் பெருமக்கள் எங்கள் வருமாணத்தில் பத்து சதவிகிதத்தை இந்திய தேசிய ராணுவத்திற்கு தொடர்ந்து வழங்குகிறோம் என்று அறிவித்தனர். இவ்வறிவிப்பைக் கேட்ட நேதாஜி அவர்கள் சற்று கோபத்துடன் தாய்நாட்டின் விடுதலைக்காக ரத்தம் சிந்தும் எங்கள் வீரர்கள் ஐந்து சதவிகிதம் பத்து சதவிகிதம் என்று கணக்குப் பார்த்தா ரத்தம் சிந்துகின்றனர்? நீங்கள் கணக்குப் பார்க்கின்றிரீர்களே ! என்று பேச ! கூட்டத்தில தொப்பி தாடியுடன் இருந்த முதியவர் ஒருவர் மேடையை நோக்கி வந்து நேதாஜியின் கையில் ஒரு காகிதத்தைக் கொடுக்கிறார். அதை வாங்கிப் படித்த நேதாஜியின் கண்களில் நீர் திரண்டு இமை வரப்புகளுக்குள் முட்டி மோதி நிற்கிறது. நேதாஜி உணர்ச்சி வசப்படும் வகையில் அக்காகிதத்தில் அப்படி என்ன தான் எழுதப்பட்டிருந்தது?
ரங்கூன் மாநகரில் எனக்குச் சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வியாபார நிறுவனங்களை இந்திய தேசிய ராணுவத்திற்காக நான் எழுதி வைக்கிறேன்– என்ற கொடை வாசகங்கள் அக்காகிதத்தில் இடம் பெற்றருந்தன. அவ்வாசகங்களை எழுதிய கரங்களுக்குச் சொந்தக்காரரான முகம்மது ஹபீப் என்ற அந்த தமிழரான முதியவரை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆரத்தழுவியவராக இவர் தான் ஸேவக் கி ஹிந்த் (இந்தியாவின் சேவகர்) என்ற பெருமிதத்துடன் அறிவித்தார்.
(ஆதாரம் ஜெயமணி சுப்பிரமணியம், நேதாஜியின் வீரப்போர் இரண்டாம் பாகம், பக்கம் 181 கே. அருணாசலம், ஜெய்ஹிந்த், பக்கம் 86)
இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது. – மறைந்த பத்திரிகையாளர் குஷ்வந்த்சிங், இல்லஸ்டிரேட் வீக்லி, 29-12-1975.
இப்பட்டியல் இன்னும் நீளமாகவே இருக்கின்றது.
நன்றி : தமுமுக-சவூதி அரேபியா
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment