விவசாயிகளை அலைகழிக்கவும், ஊழலை பெருக்கவும் வகை செய்யும் ஆழ்துளை கிணறு தோண்ட அனுமதி பெறுவதை கட்டாயமாக்கும் சட்டத்தை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழ் நாடு ஊராட்சிகள் சட்டத்தைத் திருத்துவதற்கான முன்வரைவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப் பட்டிருக்கிறது. அதன்படி வேளாண்மை உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக ஆழ்துளை குழாய் கிணறு தோண்ட உள்ளாட்சி அமைப்புகளிடமிருந் து அனுமதி வாங்குவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அனுமதி பெறாமல் ஆழ் துளை கிணறுகள் அமைப்போருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம்  வரை அபராதமும்  விதிக்கப்படும்  என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆழ் துளை கிணறுகளில் குழந்தைகள் விழுந்து உயிரிழப்பதாகவும் , இத்தகைய விபத்துக்களைத் தடுக்கவே இச்சட்டம்  கொண்டு வரப்படுவதாகவும்  தமிழக அரசின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் ஆழ் துளை குழாய் கிணறு விபத்துக்களைத் தடுக்கும்  விஷயத்தில் தமிழக அரசின் நோக்கம்  நல்லதாக இருந்தாலும் , இதற்கு தீர்வு காண்பதற்காக அரசு கடைபிடித்துள்ள அணுகுமுறை சரியானது அல்ல. 10 முதல் 24 அங்குலம்  வரை விட்டம்  உள்ள ஆழ்துளைக் குழாய் கிணறுகள் தான் ஆபத்தானவை. இவற்றில் தான் விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பதால் இவற்றை முறைப்படுத்துவது சரியானது தான். ஆனால், ஒட்டுமொத்தமாக அனைத்து வகையான ஆழ்துளை கிணறுகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதால் 3 முதல் 6 அங்குலம்  விட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க விரும்பும்  விவசாயிகளுக்கு பெரும்  பாதிப்புகள் ஏற்படும்  என்பதை அரசு உணர வேண்டும் .
சிறிய ஆழ் துளை கிணறுகளாக இருந்தாலும்  அதற்கான அனுமதி பெற ரூ.5000 கட்டணம் செலுத்த வேண்டும்  என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இது மிகப்பெரிய தொகையாகும் . ஊராட்சிகள் மிகவும்  சிறிய அமைப்புகளாக இருக்கும்  நிலையில், ஆழ் துளை கிணறுகளுக்காக அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் போது, அதை ஆய்வு செய்யும்  பொறுப்பில் இருப்பவர்கள் தனிப்பட்ட மற்றும்  அரசியல் விருப்பு வெறுப்புகளை மனதில் கொண்டு, அனுமதி தர மறுக்கும்  ஆபத்து உள்ளது. தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தால் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்திற்கான பிழைப்பை விடுத்து அனுமதிக்காக அலையும்  நிலை ஏற்படுவதும் , ஆழ் துளைக் குழாய் கிணறுகளுக்கு அனுமதி தருவது என்ற பெயரில் ஊழல் பெருகுவதும்  தான் நடக்குமே தவிர, ஆழ்துளை குழாய் கிணறுகளை ஒழுங்குபடுத்த இயலாது.
எனவே, சிறு கிணறுகள் உட்பட அனைத்து வகையான ஆழ் துளை குழாய் கிணறுகளை அமைப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து அனுமதி பெற வேண்டும்  என்ற புதிய சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் . வேண்டுமானால், குழந்தைகளின் உயிர் குடிக்கும்  அதிக விட்டம் கொண்ட ஆழ்துளைக் கிணறுகளை முறைப்படுத்த தமிழக அரசு தனியாக சட்டம்  கொண்டு வரலாம் என்று தெரிவித்துள்ளார்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment