புளியங்குடி வாவா ராவுத்தர் தெருவைச் சேர்ந்தவர் மைதீன்வாவா. விவசாயியான இவருக்கு சொந்தமான நிலம் புளியங்குடி சாணாம் பரும்பு பகுதியில் உள்ளது. நேற்று வழக்கம்போல் விவசாய பணிகளை கவனிக்க மைதீன் வாவா தனது நிலத்திற்கு சென்றார்.
அங்கு எலுமிச்சை பழங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டெருமை திடீரென வந்து மைதீன் வாவாவை முட்டியது. இதில் நிலை குலைந்த அவர் கீழே விழுந்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மனித நேய மக்கள் கட்சி நகர செயலாளர் அப்துல் ரகுமான் வனத்துறையினரிடம் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
புளியங்குடி பகுதி விவசாய நிலங்களில் காட்டெருமைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த சில நாட்களில் மட்டும் மைதீன்,ஜெய்லானி, லத்தீப்,அபுல்ஹசன், மாரியப்பன் ஆகியோர் காட்டெருமைகளால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளனர். நேற்று மைதீன்வாவா காட்டெருமையால் தாக்கப்பட்டுள்ளார்.தொடர் சம்பவங்களால் விவசாயிகள், பொதுமக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். விவசாய நிலங்களுக்கு செல்லவே பயப்படுகின்றனர். எனவே காட்டெருமைகள் அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment