திருநெல்வேலி மேலப்பாளையத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் திடீரென போலீஸார் மீது கல் வீசப்பட்டது. இதில், காவலருக்கு காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீஸார் தடியடி நடத்தினர்.

இதைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணியினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலப்பாளையத்தில் ஸ்ரீவிவேகானந்த மகாசபை, பாரதிய ஜனதா கட்சி சார்பில் வியாழக்கிழமை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சனிக்கிழமை மாலை குறிச்சி சொக்கநாதர் கோயில் சன்னதி திடலிலிருந்து 12 அடி உயர விநாயகர் சிலை உள்பட 111 சிலைகளுடன் விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது.

ஊர்வலத்தில் பாஜக, இந்து முன்னணியினர் கலந்துகொண்டனர். மாநகர காவல் கூடுதல் துணை ஆணையர் குமாரவேல், உதவி ஆணையர் மாதவன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். முக்கிய வீதிகள் வழியாக வந்த விநாயகர் சிலை ஊர்வலம், குறிச்சி அழகிரிபுரத்தைக் கடந்தபோது, திடீரென போலீஸார் மீதும், அழகிரிபுரம் பகுதியிலும் கல்வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கல்வீச்சில் ஆயுதப்படை காவலர் மாரியப்பனுக்கு காயம் ஏற்பட்டது.

போலீஸ் தடியடி: அப்போது ஏற்பட்ட ரகளையைத் தொடர்ந்து போலீஸார் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில், பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினர் மு. பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலருக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, விநாயகர் ஊர்வலம் நிறுத்தப்பட்டது. போலீஸாரின் நடவடிக்கையைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணியினர் குறிச்சி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாநகர காவல் துணை ஆணையர் து.பெ. சுரேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடையாத பாஜக, இந்து முன்னணியினர் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

2 மணி நேரம் நீடித்த மறியல் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, விநாயகர் சிலை ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் தொடர்ந்து நடைபெற்றது.

கல்வீச்சில் பேருந்துகள் சேதம்: இதற்கிடையே, திருநெல்வேலி சந்திப்பிலிருந்து மேலப்பாளையம் சென்ற அரசு நகரப் பேருந்து உள்ளிட்ட மாநகரில் 3 பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்கியதில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment