ஆனால் இந்த இளைஞர்களுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் ஈராக்கில் சிக்கித் தவித்த இந்திய நர்ஸ்களை விடுவித்ததற்கு நன்றி சொல்லும் வகையில்தான் இந்த டி சர்ட்டை அணிந்து போஸ் கொடுத்ததாகவும் சிக்கிய நபர் கூறியுள்ளார். இதையடுத்து அவரை கடுமையாக எச்சரித்து போலீஸார் விடுவித்துள்ளனர்.
பிடிபட்ட நபரின் பெயர் அப்துல் ரஹ்மான். 22 வயதாகும் இவரை நேற்று போலீஸார் தங்களது காவலுக்குக் கொண்டு வந்து விசாரித்துள்ளனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. மயில்வாகணன் கூறுகையில், ஈராக்கில் சிக்கியிருந்த இந்திய நர்ஸ்களை விடுவித்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இப்படிச் செய்ததாக ரஹ்மான் கூறியுள்ளார். மேலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தியாவில் தடை விதிக்கப்படாத அமைப்பு என்பதாலும் இப்படிச் செய்ததாக அவர் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து கியூ பிரிவு போலீஸாரும், உளவுப் போலீஸாரும் இணைந்து விசாரணை மேற்கொண்டனர். தொண்டியில் உள்ள மசூதி முன்புவைத்து இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளனர்.
இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் தற்போது வெளிநாடு போய் விட்டார். அவர்தான் சமூக வலைத்தளங்களில் இந்தப் புகைப்படத்தைப் போட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டையில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில்தான் இந்த டி சர்ட்டை தயாரித்துள்ளனர். மொத்தம் 100 டி சர்ட்களைத் தயாரித்துள்ளனர். அதில் 36 டி சர்ட்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
ரஹ்மானின் நண்பரான வில்லவன் என்பவர்தான் இந்த ஏற்பாட்டைச் செய்து கொடுத்துள்ளார். ரஹ்மான் மற்றும் அவருடன் போஸ் கொடுத்த மற்ற இளைஞர்களுக்கு தீவிரவாத செயல்பாடுகள் அல்லது தீவிரவாத அமைப்புகளுடன் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
இருப்பினும் அவர்களைத் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருவோம். கடுமையாகவும் அவர்களை எச்சரித்துள்ளோம்.
இவர்கள் இப்படி டி சர்ட் போட்டு போஸ் கொடுத்தபோது மசூதி நிர்வாகிகளும் கூட இது கூடாது என்று எச்சரித்துள்ளனர். ஆனால் ஜாலிக்காக பீதியை ஏற்படுத்தவே எடுக்கிறோம் என்று கூறி புகைப்படம் எடுத்துள்ளனர். தற்போது இந்தப் புகைப்படம் இணையதளங்களிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு தீவிரமாக ஆதரவாளர்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை என்றார்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment